Aran Sei

இலங்கை மனித உரிமை மீறல்கள் – ஹார்வர்ட் சட்டக் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பில் ஐநாவுக்கு கடிதம்

image credit : thecrimson.com

ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் இரண்டாமாண்டு மாணவரான சோண்ட்ரா ஆர். பி. ஆன்டன் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு அந்நாட்டு அரசிடம் பொறுப்புக் கோருவதை வலியுறுத்தி ஒரு புதிய தீர்மானத்தை உருவாக்கும்படி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையை கேட்கும் ஒரு திறந்த கடிதத்தை ஒருங்கிணைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் சர்வதேச மனித உரிமைகள் துறை, நீதிக்கும் பொறுப்புக் கோரலுக்குமான மையம், மனித உரிமைகள் கண்காணிப்பு, சித்திரவதைகளுக்கு எதிரான உலக அமைப்பு உள்ளிட்ட 22 அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த பிப்ரவரியில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதம், “2019 நவம்பரில் கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே இலங்கையில் உள்நாட்டு நீதிக்கும் பொறுப்புக் கோரலுக்கும் ஆன முயற்சிகள் முற்றிலும் மங்கி விட்டன” என்று வாதிடுகிறது.

கோத்தபய ராஜபக்ச அவரது சகோதரர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசில் 2005-2015 வரை பாதுகாப்புத்துறை செயலராக இருந்தவர். இந்தக் காலத்தில் அரசை விமரித்தவர்கள் பலர் காணாமல் போயினர் அல்லது சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் 26 ஆண்டுகாலம் நடந்த உள்நாட்டுப் போர், கடைசி மாதத்தில் மட்டும் பல பத்தாயிரக் கணக்கான மேற்பட்ட தமிழர்களின் படுகொலைக்குப்பின் 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அந்தக் கொலைகளில் பெரும்பாலானவை அரசின் குண்டுவீச்சால் நிகழ்ந்தவை. இந்தக் காலத்தில் கோத்தபய ராஜபக்ச இழைத்த போர்க் குற்றங்கள் குறித்தும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நாவும் பிற மனித உரிமை அமைப்புகளும் கோரியுள்ளன.

கோத்தபய ராஜபக்ச அதிபராக தேர்வானது இலங்கையில் மனித உரிமைகள் மேலும் பின்னடைவை சந்திக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020, பிப்ரவரியில் பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சவின் புதிய அரசு, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இந்த முடிவு, இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்பு கோரலை எதிர்கொள்ள “முடியாமல் இருப்பதையும் விரும்பாததையும்” காட்டுவதாக ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான தலைமை ஆணையர் கூறியிருந்தார்.

ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் சர்வதேச மனித உரிமைகள் துறையுடன் நெருக்கமாக இணைந்து இந்தக் கடிதத்தை எழுதிய சோண்ட்ரா ஆர். பி. ஆன்டன், “இலங்கைக்கு இது முக்கியமான நேரம்” என்றும் “இலங்கை அண்மைக் கால வரலாற்றில் உலகின் மிகப் பெரிய தோல்விகளில் ஒன்றாகும்,” என்றும் கூறுகிறார்.

“போருக்குப் பின் அமைதி வரும் என்பது அனுமானம். ஆனால் இலங்கையில் இது உண்மைக்கு புறம்பாக உள்ளது” என்கிறார் ஆன்டன்.

இந்தக் கடிதம், பல பத்தாண்டுகளாக தொடர்ந்து 2009-ல் பல பத்தாயிரக்கணக்கான குடிமக்களை கொன்று குவிப்பதில் முடிந்த இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்பு கோரும் விரிவான முயற்சிகளில் பொருந்துகிறது என்று ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் சர்வதேச மனித உரிமைகள் பிரிவின் இணை இயக்குநர் டைலர் கியானினி கூறுகிறார்.

“இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு உண்மையில் இரண்டு காரணங்கள் உள்ளன. பொறுப்புக் கூறல் சர்வதேச நிகழ்ச்சி நிரலிலிருந்து மறைந்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதும் எதிர்கால தவறுகளை தவிர்ப்பதும் ஆகியவையே அவை. ஏனெனில் இந்தப் புதிய அரசின் கீழ் நிலைமைகள் மிகவும் மோசமடையும் ஆபத்துகள் அதிகமாக உள்ளன,” என்கிறார் கியானின்.

அதிகரித்து வரும் இன-தேசிய வாத அலையும் சிறுபான்மையினரை துன்புறுத்துவதும் இலங்கை உள்ளிட்டு உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் பொறுப்புக்கோரல் இல்லாமல் போவதால் தூண்டப்படுகின்றன என்று ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளவருமான தாமஸ் பெக்கர்.

“நீதியின்மை நீதியின்மையையும் நீதி நீதியையும் வளர்க்கிறது” என்கிறார் அவர்.

ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், மனித உரிமைகளுக்கான வலைப்பின்னல் அமைப்பின் நிர்வாக இயக்குநருமான, 84 வயதான ஜேம்ஸ் எல்‌.கேவல்லாரோ, “இலங்கையை பொறுப்புக் கோரலுக்கு உட்படுத்தும் முயற்சிகளில் மீண்டும் ஐ.நா. ஈடுபடுவது முக்கியம் என்று கூறுகிறார்.

“இந்த இடம்தான் இலங்கை போன்ற ஒரு அரசு சர்வதேச அழுத்தத்திற்கு பதில் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால், இலங்கை சர்வதேச பார்வையிலிருந்து மறைந்து விட்டது. நடந்ததை மறந்து விட்டு போவது ஆரோக்கியமானதல்ல. ஒரு வகையில் அது சர்வதேச சட்டத்துக்கும் பொறுப்புக் கோரலுக்கும் நல்லதல்ல,” என்கிறார் கேவல்லாரோ.‌

நீதி மற்றும் பொறுப்புக்கோரல் மையம் என்ற அமைப்பில் பணிபுரியும் மூத்த வழக்கறிஞர் நுஷின் சர்க்காரதி, “உலகம் இலங்கையை பொறுப்புக்கோரலுக்கு ஆளாக்குமா என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் கைகளில்தான் இருக்கிறது.” என்று கூறுகிறார்.

“ஒரு புதிய தீர்மானத்திற்கு அடிமட்டத்தில் பெருமளவு ஆதரவு இருப்பதை உலக நாடுகள் காண்பார்கள் என்று நான் நம்புகிறேன். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தச் செயலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியது அவர்கள் கையில் இருக்கிறது,” என்று சர்க்காரதி கூறுகிறார்.

ஒரு அஷ்கெனாசி யூத தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த ஒரு மகளாக, “வெகுஜன கொடூரத்தின் மரபு தலைமுறை தலைமுறையாக எவ்வாறு கடத்தப்பட்டு வந்திருக்கிறது” என்பதையும், “தண்டனையிலிருந்து தப்பியவர்கள் தப்பிப் பிழைத்த சமூகங்களுக்கு விட்டுச் செல்லும் அழிக்க முடியாத வடுக்களையும் பார்த்திருக்கிறேன்.” என்று மின்னஞ்சலில் அனுப்பியுள்ள ஒரு அறிக்கையில் சோண்ட்ரா ஆர். பி. ஆன்டன் கூறுகிறார்.

“சர்வதேச செயலாற்றதன்மை எனது சொந்த குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தியிருக்கும் வேதனைகளையும் மன உளைச்சலையும் காண்பது சில சமயங்களில் இந்த வகை வேலைகள் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் இந்த மாதத்தில் ஜெனிவாவில் என்ன நடந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் நீதி முக்கியமானது என்பதற்கு ஒரு நினைவூட்டலாக இது எனக்கு உள்ளது,” என்கிறார் ஆன்டன்.

www.the crimson.com இணைய தளத்தில் எம்மி. எம். சோ, மரியா ஜி. கன்சாலெஸ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்