Aran Sei

`பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யணும்’ – வலியுறுத்தும் ஐநா சபை

Credits: Vatican News

த்ராஸ் வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவில் நீதி கிடைக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார். பெண்ணின் உடலைப் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் இரவோடு இரவாக போலீசார் தகனம் செய்தனர்.

உத்தரப்பிரதேசக் காவல்துறை அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கினை விசாரித்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”இந்திய பெண்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் பாலியல் வன்முறைகள் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளன.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதை ஹத்ராஸ், பலராம்பூரில் நடந்துள்ள வன்புணர்வு மற்றும் கொலைச் சம்பவங்கள் மீண்டும் நினைவுபடுத்துகின்றன.

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இந்திய அரசுக்கும் மக்களுக்கும் துணை நிற்கும்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் “எதிர்க்கட்சியினர் வெளிநாட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக சாதி மற்றும் மதக் கலவரத்தைத் தூண்டும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளார்கள்.

கடந்த ஒரு வார காலமாக கலவரத்தைத் தூண்டுவதில் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டுள்ளார்கள். இந்தச் சதித்திட்டங்களை மீறி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது.

பாஜக உறுப்பினர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். கலவரத்தை மட்டுமே விரும்பும் சமூக விரோதிகளுக்கும் தேச துரோகிகளுக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியை ஒப்புக்கொள்ள முடிவதில்லை.” என்று கூறியுள்ளார்.

”அரசியல் கட்சிகளைச் சார்ந்த சிலர், முன்கூட்டி திட்டமிடப்பட்ட சதி வேலையினால் சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளார்கள். அவர்கள் மீது தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் வழக்கு குறித்து வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு உத்தரப்பிரதேசக் காவல்துறை கூடுதல் இயக்குநர் பிரஷாந்த் குமார் கூறினார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சஞ்சய் சிங் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்கள்.

இரு தினங்களுக்கு முன் காவல்துறை எதிர்ப்பை மீறி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்று பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர்.

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் நேற்று ஹத்ராஸ் சென்று குடும்பத்தினரைச் சந்தித்ததோடு, அவர்களுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

தடையை மீறக் கூடியதாக சந்திரசேகர ஆசாத் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீது உத்தர பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஹஸ்ராத் வழக்கு தொடர்பாக பிரயங்கா காந்தி ட்விட்டரில், “பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்க்கப்போவதாக உத்தரப்பிரதேச முதல்வர் கூறியிருந்தார், அப்படியானால், அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் காது கொடுப்பார்களா?”

”பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலுக்குச் செவி மடுப்பதே நீதிக்கான முதல் படி. ஆனால் எதார்த்தத்தில் பாரதிய ஜனதா கட்சி அந்தப் பெண்ணுக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தி வருகிறது.” எனவும் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்