Aran Sei

துப்பாக்கியால் மிரட்டிய வலதுசாரி வன்முறையாளர் – இஸ்லாமிய பயங்கரவாதி என அவதூறு பிரச்சாரம்

டந்த வியாழக்கிழமை அன்று தெற்கு பிரான்சில் உள்ள அவிக்யான் (Avignon) நகரில் கைத்துப்பாக்கியால் மக்களை மிரட்டிய ஒருவனை போலீஸ் சுட்டுக்கொன்ற செய்தி வெளியானது. துப்பாக்கியைக் கீழே போட மறுத்ததாலும் எச்சரிக்கை விடுத்தும் தடுக்க முடியாததாலும் அவரைச் சுட வேண்டியது வந்தது என்று ஒரு போலீஸ் அதிகாரி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

அந்த நபர் தீவிர வலதுசாரி அமைப்பான `தலைமுறை அடையாளம்’ (Generation Identity)-ஐச் சேர்ந்தவன் என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.

ஆனால் பிரெஞ்சு ஊடகங்கள், தொடக்கத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் “அல்லாஹூ அக்பர்” என்று முழங்கியதாகச் செய்தி வெளியிட்டு இது ஒரு இசுலாமிய தாக்குதல் என்ற கருத்தைப் பரப்பின என்று பிரிட்டனின் இண்டிபெண்டென்ட் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த opindia.com என்ற வலதுசாரி செய்தித்தளமும் இந்தப் பொய்ச் செய்தியைக் குறிப்பிட்டு “இன்னொரு இசுலாமிய பயங்கரவாதி தாக்கினார்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

பிரான்சில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கருத்துச் சுதந்திரம் பற்றிய வகுப்பில் முகமது நபி பற்றி சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை வகுப்பில் காட்டியதைத் தொடர்ந்து, பள்ளிக்கு வெளியில் அவரது தலையை வெட்டிப் படுகொலை செய்தான் செசன்யாவைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி. இதற்கு பிரான்ஸ் முழுவதும் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

‘நான் சாமுவேல்’ – கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள்

ஆனால், மதவெறி பிடித்த தனிநபரின் செயலை ஒட்டு மொத்த முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமாக அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் மேற்கொள்வதைப் பல்வேறு முஸ்லிம் பெரும்பான்மை நாட்டுத் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.

இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்து – பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

வியாழக்கிழமை பிரான்சின் நைஸ் நகரில் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் மூன்று பேர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று நைஸ் நகர மேயர் கூறியிருந்தார்.

பிரான்ஸ் தேவாலயத்தில் மூவர் கொலை : மீண்டும் பதற்றம்

இந்நிலையில் அவிக்யான் நகரில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர் “தலைமுறை அடையாளம்” என்ற வலதுசாரி, வெளிநாட்டவர் விரோத அமைப்பின் மேல் சட்டையை அணிந்திருந்தார்.

ஐரோப்பா முழுவதும் செயல்படும் “தலைமுறை அடையாளம்” அமைப்பு, “வெள்ளையின மக்கள் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு வருகிறார்கள். முஸ்லிம்களை ஐரோப்பிய கண்டத்திலிருந்து ‘வெளியேற்றம்’ செய்ய வேண்டும்” என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

சென்ற ஆண்டு நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் 51 பேர் உயிரிழந்த மசூதிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நிகழ்த்தியவர் “தலைமுறை அடையாளம்” அமைப்பின் மைய சித்தாந்தத்தின் பெயரைத் தனது பிரகடனத்தின் தலைப்பாகப் பயன்படுத்தியிருந்தார்.

அவர் இந்த இனவாத குழுவுக்கு நிதி நன்கொடை வழங்கியிருந்தார் எனவும், அதன் ஆஸ்திரியத் தலைவர் மார்ட்டின் செல்னருடன் மின்னஞ்சல் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் பின்னர் தெரிய வந்தது என்று இண்டிபெண்டென்ட் செய்தி தெரிவிக்கிறது.

“தலைமுறை அடையாளம்” அமைப்பின் பிரெஞ்சுக் கிளையின் மூத்த உறுப்பினர்கள் சென்ற ஆண்டு “ஐரோப்பாவைப் பாதுகாப்போம்” இயக்கத்தில் பங்கேற்றதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் குழுவைத் தடை செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர்.

2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்தாலிய எல்லையைத் தாண்டி வரும் புலம் பெயர்பவர்களைத் தடுப்பதற்காக 100 பேரைத் திரட்டிச் சென்றது “தலைமுறை அடையாளம்” என்ற இந்த வலதுசாரி அமைப்பு. நீலச் சீருடைகளை அணிந்து, ஹெலிகாப்டர்களுடனும் ஒரு சிறிய விமானத்துடனும் “தலைமுறை அடையாளம்” மற்றும் “ஐரோப்பாவைப் பாதுகாப்போம்” அமைப்புகளின் உறுப்பினர்கள் எல்லைப் பகுதிக்குச் சென்றனர். “உங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்ற பெரிய பேனரை பறக்கவிட்டனர்.

பிரான்சின் ஆல்ப்ஸ் பகுதியில் புகலிடம் தேடி வரும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் எடுத்த இந்த நடவடிக்கைக்காக “தலைமுறை அடையாளம்” அமைப்பின் தலைவர்களான மூன்று பேருக்கு 6 மாதச் சிறைத்தண்டனையும், 75,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த மூன்று பேருக்கும் 5 ஆண்டுகள் வாக்களிக்கும் உரிமை ரத்து செய்யப்பட்டது.

வியாழக்கிழமை “தலைமுறை அடையாளம்” அமைப்பின் ஆஸ்திரிய தலைவர் மார்ட்டின் செல்னர், அவிக்யானில் கொல்லப்பட்டவரின் படத்தைத் தனது டெலிகிராம் சேனலில் பகிர்ந்து, “அவர் அடையாள இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். அவர் ‘தலைமுறை அடையாளம்’ அமைப்பின் மேல் சட்டை அணிந்திருந்தார். ஆனால், அந்தச் சட்டையை யார் வேண்டுமானாலும் இணையத்தில் வாங்கிக்கொள்ளலாம்” என்று கூறியிருந்தார்.

பாதுகாப்புக் காரணங்களினால் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்ட மார்ட்டின் செல்னர், தாக்குதல் நடத்திய நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறியிருக்கிறார்.

தலைமுறை அடையாளம் அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அந்த நபர் தங்களது பிரெஞ்சுக் கிளையின் உறுப்பினர் என்பதை மறுத்தது.

“அந்த நபர் 2018-ல் ஆல்ப்ஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவரும் இல்லை. எங்களது பிரெஞ்சுக் கிளையின் உறுப்பினரும் இல்லை. அடையாள இயக்கம் எப்போதுமே பயங்கரவாதத்தையும் வன்முறையையும் நிராகரிக்கிறது. வன்முறையற்ற அரசியல் செயல்பாட்டைத்தான் நாங்கள் கடைப்பிடிக்கிறோம்” என்று அது கூறியிருந்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்