கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபட் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். அந்த சங்கத்திற்கு, ஆல்ஃபபட் தொழிலாளர்கள் சங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “இன்றைய தினம், கூகுள் மற்றும் ஆல்ஃபபட்டின் பிற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அமெரிக்க தகவல் தொடர்பு தொழிலாளர்கள் அமைப்பின் (Communications Workers Of America) ஆதரவுடன், ஆல்ஃபபட் தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளோம் என்பதை அறிவிக்கிறோம். இந்த நிறுவனத்தின் வரலாற்றில் இதுவே முதல் சங்கமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் – பெர்னி சாண்டர்ஸ் வரவேற்பு
இதற்கு முன்னர், கூகுள் பயனாளர்கள் ‘உண்மையான பெயரை’ தெரிவிக்க வேண்டும் என்ற கொள்கைக்காகவும், அமெரிக்க ராணுவத்திற்காக வேலை செய்து தரக்கூடாது என்பதற்காகவும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் குற்றத்தை மறைத்ததற்கு எதிராகவும், ஆல்ஃபபட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தது நினைவுகூரப்பட்டுள்ளதுடன், இவ்வாறாக “பல ஆண்டுகளாக, கூகுள் ஊழியர்கள் மேற்கொண்ட பலமான ஒருங்கிணைப்பின் மீது சங்கம் கட்டமைக்கப்படுகிறது” என்று அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபபட் நிறுவனத்தில், உலகம் முழுவதும் 1,20,000 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் பாதிப்பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்று தெரிவித்துள்ள ஆல்ஃபபட் தொழிலாளர்கள் சங்கம், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்காக பணியாற்றும் பிற நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் (Vendors) என அனைவரின் நலனுக்காக இந்த சங்கம் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
சங்கம் அமைத்ததற்காக பணியிட மாற்றம் – வீடியோவை வெளியிட்டு காணாமல்போன தொழிலாளர்
அனைவருக்குமான, நியாயமான பணிச் சூழலை உருவாக்குவது, தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பது, நிறுவனத்தின் மதிப்பை கெடுக்கும் வகையிலான பணிகளை நிராகரிப்பது, எந்த வித பாகுபாடும் இன்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமான உரிமையை பெறுவது ஆகிய நோக்கங்களுக்காக சங்கம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் டிம்னிட் கெப்ரு என்பவர், எந்த வித காரணமுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள சங்கம், இதுபோன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு, தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சங்கத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை உணர்ந்தே, ஆல்ஃபபட் தொழிலாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.