Aran Sei

`போராடுவது ஜனநாயக உரிமை, இது நிலைநாட்டப்பட வேண்டும்’ – கனடிய பாதுகாப்புத் துறை

credits : indian express

ந்திய அரசு விவசாயிகளை நடத்தும் விதம் குறித்துப் புலம்பெயர் பஞ்சாபியர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி சலோ ( டெல்லி போவோம்) எனும் பேரணி விவசாயச் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க முள்வேலி, மணல்மூட்டைகள், ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் கூட்டம் கூட்டக் கூடாது எனக் கூறி டெல்லி சென்ற விவசாயிகளுக்குப் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதியை மறுத்தது. தற்போது தடையை மீறிப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி அவர்கள் நகரத்திற்குள் நுழைவதைக் காவல்துறை தடுத்து வந்தது. தற்போது வடமேற்கு டெல்லியில் உள்ள நிரங்கரி மைதானத்தில் அவர்களுக்குப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்திற்குக் கனடாவில், ஏறக்குறைய 20 சதவீதம் பஞ்சாபியர்கள் வாழும் ’சிறிய பஞ்சாப்’ என அழைக்கப்படும் பிராம்ப்டன் மாநகர பஞ்சாபியர்கள், ஆதரவு தெரிவித்துள்ளனர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து, லண்டன், பர்மிங்ஹாம், கேல்கரி, சுர்ரே எனப் புலம்பெயர் பஞ்சாபியர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன. இந்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணி, பதாகைகள் ஏந்திக்கொண்டு பஞ்சாபியிலும் ஆங்கிலத்திலும் கோஷமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் #Istandwithfarmers எனும் ஹேஷ்டேக் மூலம் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதவாக புலம் பெயர் பஞ்சாபியர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். கனடாவின் தேசியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சஜன் ”போராடுவது ஜனநாயக உரிமை, இந்த அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் ”நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் சட்டங்களை எதிர்க்கும் வேதனையையும் வலியையும் நான் உணர்கிறேன். அமைதியான போராட்டக்காரர்களை அரசு வன்முறையுடன் கையாள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் ”போராடும் விவசாயிகளை இந்திய அரசு இவ்வாறு நடத்தக் கூடாது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் கனடாவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிராக இந்திய அரசால் தொடுக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்