பிரான்ஸில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் பத்திரிகையாளர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த மசோதா தகவல் அறியும் சுதந்திரத்தை மீறுவதாக அவர்கள் கருதுகின்றனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு காவல் அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
வன்முறைகளில் இருந்து காவலர்களைப் பாதுகாக்கும் நோக்கோடு இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக பிரெஞ்சு அரசு கூறுகின்றது. பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்பட்டால், பணியில் இருக்கும் அதிகாரிகளைப் படம்பிடிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். குறிப்பாகப் போராட்டங்களின் பொது வேலைநிமித்தமாகக் காவலர்களைப் படம்பிடிக்கும் தேவை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால், பாரிஸ் மற்றும் பிரெஞ்சு நகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, அம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரான்ஸ், மனித உரிமைகள் லீக், பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பிற குழுக்கள் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளன.
இந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பிரான்ஸின் மனித உரிமை அமைப்பின் உயர் அதிகாரிகளும் இம்மசோதா குறித்த தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அபாயம் கொண்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
விமர்சனத்திற்குப் பதிலளித்த பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இந்த நடவடிக்கை தகவல் அறியும் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காது என்றும் பாதிப்பு விளைவிக்கும் நோக்கத்துடன் காவல்துறை அதிகாரிகளைப் படம் பிடிப்போர் மீது மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மசோதாவின்படி குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனையும் 45,000 யூரோ (ரூ.39,56,000) அபராதமும் விதிக்கப்படும்.
‘பாதுகாப்பு மசோதா’, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்சி அந்நாட்டின் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.
நவம்பர் 24-ம் தேதி அன்று, பிற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட இந்த மசோதாவுக்குச் சட்டம் இயற்றுபவர்கள் வாக்களிக்க உள்ளனர். பின்னர் அதைச் சட்டமாக்க செனட்டுக்கு அனுப்பப்படும்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.