Aran Sei

அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்குகள் முடக்கம் – டிவிட்டர், பேஸ்புக் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பக்கங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன.

டிவிட்டர் 12 மணி நேரத்துக்கு டிரம்பின் கணக்கை முடக்கி வைத்துள்ளது. எதிர்காலத்தில் இது போல வரம்பு மீறல்கள் நடந்தால் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

புகாருக்கு உள்ளான மூன்று ட்வீட்டுகளை நீக்கி விடுமாறு டிவிட்டர் டிரம்பை கேட்டுக் கொண்டுள்ளது. அவற்றில், வாஷிங்டன் மாநகரில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை ஆக்கிரமித்த வன்முறை கும்பலை ஆதரித்து அவர் பேசிய வீடியோவும் அடங்கும்.

டிரம்ப் அந்த ட்வீட்டுகளை நீக்கி விட்டார். அவ்வாறு நீக்கா விட்டால், அவரது கணக்கின் மீதான தடை நீடிக்கப்படும் என்று டிவிட்டர் அச்சுறுத்தியிருந்தது.

டிவிட்டரில் டொனால்ட் டிரம்பின் கணக்கை 8.8 கோடிக்கும் அதிகமான பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக்கிலும் அதற்கு சொந்தமான இன்ஸ்ட்ராகிராமிலும் டிரம்பின் பக்கங்கள் 24 மணி நேரம் முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பேஸ்புக்கின் துணைத் தலைவர் கய் ரோசன், “இது ஒரு அவசர நிலை, அதற்குப் பொருத்தமான அவசரநிலை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதில் அமெரிக்க அதிபரின் வீடியோவை நீக்கியதும் அடங்கும்” என்று கூறியுள்ளார்.

யூடியூப் குறிப்பிட்ட வீடியோவை நீக்கி விட்டாலும், இதுவரையில் டிரம்பின் கணக்கை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

டொனால்ட் டிரம்ப் – உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர்

இந்த சமூக வலைத்தளங்களில் முடக்கப்பட்ட வீடியோவில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் வன்முறையாக நுழைந்து, போலீசுடன் மோதி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் பயத்தில் ஒழிந்து கொள்ளும்படி செய்த கும்பலுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

“ஒரு மகத்தான தேர்தல் வெற்றி, இழிவாகவும் குரோதத்துடனும் மகத்தான தேசபக்தர்களிடமிருந்து பறிக்கப்படும் போது இது போன்ற நிகழ்வுகள்தான் நடக்கும். அந்த தேசபக்தர்கள் நீண்ட காலமாகவே மோசமாகவும், நியாயமற்ற முறையிலும் நடத்தப்பட்டுள்ளனர்” என்று டிரம்ப் பேசியிருந்தார்.

“அன்போடும் அமைதியோடும் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். இந்த நாளை என்றென்றும் நினைவில் வைத்திருங்கள்” என்று அவர் கூறியிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்