Aran Sei

எத்தியோப்பியாவில் இனப்படுகொலை: ‘வந்தேறிகள்’ என்று கூறி 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

மேற்கு எத்தியோப்பியாவில், பெனிஷாங்குல்-குமுஸ் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இனப்படுகொலை செய்யப்பட்டதாக எத்தியோப்பியாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

குமுஸ் எனும் இனத்தை சேர்ந்தவர்கள் அம்ஹாரா, ஒரோமோ மற்றும் ஷினாஷா ஆகிய இனத்தவர்கள் ‘வந்தேறிகள்’ எனக்கூறி அவர்களை தீ வைத்தும், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர் என்பது இனப்படுகொலை தாக்குதலில் தப்பித்த ஐவரிடம் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பேசிய போது தெரிய வந்துள்ளது.

எத்தியோப்பியா நாட்டு பிரதமர் அபிய் அஹ்மத், பெனிஷாங்குல்-குமுஸ் பகுதிக்கு வந்து இன வன்முறையை தடுப்பது குறித்து பேசிய மறுநாள் இத்தாக்குதல் நடந்துள்ளது. 80 இனங்களுக்கு மேலே உள்ள எத்தியோப்பியாவில், இன வேற்றுமை காரணமான வன்முறைகள் நிகழ்வது அந்நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது. 

இந்தத் தாக்குதல்களுக்கும், எத்தியோப்பியாவின் வடக்கில் உள்ள திக்ராய் பகுதியில் எத்தியோப்பிய அரசு படைகள், திக்ராய் பிராந்திய படைகளை எதிர்த்து நவம்பர் தொடக்கம் முதல் தாக்குதல் நடத்தி வருவதற்கும் தொடர்பில்லை.

அபிய் அகமதுக்கு அலிக்கு 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியாவில் அதிக மக்கள்தொகை உள்ள இனங்களில் ’அம்ஹாரா’ இன மக்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். சமீப காலங்களில், இவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி, மேற்கு ஒரோமியா பகுதியில் நடந்த தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தனர், அதைப் போலவே, பெனிசாங்குல்-குமுஸ் பகுதியில் அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலில் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தாக்குதலில் 300 பேருக்கும் மேலானோர் அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

தற்போது, பெனிசாங்குல் -குமுஸ் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களை தாக்குதல் நடத்தும் படைகள் சுற்றி வளைத்துள்ளார்கள் எனவும், இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொதுமக்களிடம் பேசிய அம்ஹாரா அரசியல் கட்சியின் தேசிய இயக்கத்தை சேர்ந்த பெலெட்டே மொல்லா தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது..  

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்