Aran Sei

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை – மூத்த கூட்டு நாட்டை அச்சுறுத்த வேண்டாம் – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

Image Credit : ndtv.com

வுதி அரேபியாவின் ஆட்சியாளர் இளவரசர் முகமது பின் சல்மான் (எம்பிஎஸ் என்று அழைக்கப்படுகிறார்) மீது அமெரிக்கா கொலைக் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, சவுதி அரேபிய பத்திரிகைகள் இளவரசருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவின் அரசியல் எதிர்ப்பாளரான ஜமால் கசோகி புத்தக ஆசிரியராகவும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுபவராகவும், அல்-அரப் செய்தி சேனலின் பொது மேலாளர் மற்றும் தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார்.

2017-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறிய ஜமால் கசோகி சவுதி அரசாங்கத்தையும், சவுதி ஆட்சியாளர்களான மன்னர் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தார். யேமன் நாட்டின் மீது சவுதி அரேபியா தலைமையிலான இராணுவ தாக்குதலையும் அவர் எதிர்த்தார்.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி, துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

அவர் கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஜமால் கசோகியின் கொலையை மறுத்தாலும், இறுதியில் அவரது கொலை முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று சவுதி அரேபியா கூறியிருந்தது.

இந்தக் கொலை ஒரு குற்றக் கும்பலின் கொடூரமான குற்றம் என்று கூறியது சவுதி அரேபியா. சவுதி நீதிமன்றம் ஒன்றில் 8 பேருக்கு இந்தக் கொலை தொடர்பாக சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

ஜமால் கசோகியின் கொலையில் சவுதி அரேபியாவின் ஆட்சியாளரான இளவரசருக்கு தொடர்பு உள்ளது என்றும் இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின் பேரில் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்றும் 2018-ம் ஆண்டில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ)அறிக்கை ஒன்று கூறியிருந்தது.

இந்த அறிக்கையை அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிடாமல் வைத்திருந்தார். கடந்த ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – டிரம்ப் காலத்திய முடிவுகள் பல மாற்றப்படுகின்றன

ஜமால் கசோகியின் கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சவுதி இளவரசர் சல்மான் மறுத்திருக்கிறார்.

அமெரிக்க அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கொலையில் தொடர்புடைய சிலர் மீது தடைகளை விதித்திருக்கிறது, ஆனால் இளவரசர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சவுதி இளவரசர் பற்றிய அமெரிக்க அரசின் அறிக்கை குறித்து சவுதி அரேபிய பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“ஒரு போர்தந்திர ரீதியிலான கூட்டு நாட்டை இது போல மிரட்டுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை இல்லை” என்று அல் ஜசிரா செய்தித் தாளில் காலித் அல் மாலிக் எழுதியுள்ளார். “உள்நாட்டு அரசியல் வேறுபாடுகள் பிராந்திய நலன்களை பாதிக்க அமெரிக்க அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

1990-ல் நடந்த முதல் வளைகுடா போரின் போதும், 2019-ல் அதன் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் சவுதி அரேபியா தனது பாதுகாப்புக்கு அமெரிக்காவையே சார்ந்திருந்தது. சவுதி அரேபியா சீனாவிலிருந்தும் ரசியாவிலிருந்தும் கூட ஆயுதங்களை பெற முடியும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

”என்னை விடுதலை செய்யுங்கள்” – துபாய் இளவரசி ஷேக்கா லத்திபா காணொளி மூலம் கோரிக்கை

லண்டனைச் சேர்ந்த சவுதிக்கு சொந்தமான அல்-அவ்சத் செய்தித் தாளில், சவுதி அரேபியா அமெரிக்காவின் மிகப் பழமையான கூட்டணி நாடு என்றும், “மிரட்டல்களால் பயப்படக் கூடிய வாழைப்பழக் குடியரசு அல்ல” என்றும் அப்துல்லா அல் ஒடய்பி கூறியுள்ளார்.

ஒகாஸ் செய்தித் தாளில், “அமெரிக்காவுடன் ஆழமான உறவுகளை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்களது இறையாண்மையை விட்டுக் கொடுத்து அல்ல. எங்களது நீதித் துறையும், முடிவுகளையும் யாரும் அவமதிக்க முடியாது” என்று ஃபாஹிம் அல்-ஹமீத் எழுதியுள்ளார்.

சவுதி அரேபியாவின் உச்ச மத நிறுவனம், சிஐஏ அறிக்கை “பொய்யானதும் ஏற்றுக் கொள்ள முடியாததும்” என்று அதனை நிராகரித்துள்ளது. சவுதி அரசையும் அதன் தலைவர்களையும் பாதுகாப்பது இசுலாமிய கடமை என்று ட்வீட் செய்துள்ளது

“நாங்கள் எல்லோரும் முகமது பின் சல்மான்” என்ற ஹேஷ்டேகுடன் பல சவுதி அரேபியர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்