Aran Sei

வலது சாரி மேடையில் மீண்டும் டிரம்ப் – தொடரும் வலுவான ஆதரவும், வெறுப்பு பிரச்சாரமும்

Image Credit : theguardian.com

மெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசியுள்ளதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

2016 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், 2020-ல் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம் தோற்றுப் போனார். ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

ஐநா கவுன்சிலில் மீண்டும் இணையும் அமெரிக்கா – முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் முடிவை மாற்றியமைக்கும் ஜோ பைடன்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோவில் நடந்த “பழைமைவாத அரசியல் செயல்பாட்டுக் குழு” என்ற வலதுசாரி அமைப்பின் மாநாட்டில் நேற்று டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

ஒன்றரை மணி நேரம் பேசிய டொனால்ட் டிரம்ப், 2020 அதிபர் தேர்தலில் மோசடி நடந்தது என்றும், ஜோ பைடனின் குடியேற்றக் கொள்கையை கண்டித்தும், சீனாவின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியும், மாற்றுப் பாலினத்தவர் மீது வெறுப்பை உமிழ்ந்தும் பேசியதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

தான் 2020 தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், மோசடியாக தனது வெற்றி பறிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் பேசியுள்ளார்.

பதவி நீக்கத் தீர்மான தோல்வி – அரசியல் பயணம் தொடரும் என்று டிரம்ப் அறிவிப்பு

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக வழக்குகள் தொடுத்தும், தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் வந்த டிரம்ப், ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது வன்முறையை தூண்டி விட்டதாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அவர் மீது பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியினர் 2020 தேர்தலில் தோற்று விட்டனர் என்றும் “மூன்றாவது முறையும் (2024 தேர்தலில்) அவர்களை தோற்கடிக்க நான் முடிவு செய்யலாம்” என்று அவர் பேசியுள்ளார்.

இந்த மாநாட்டில் டிரம்பின் கீழ் துணை அதிபராக பதவி வகித்த மைக் பென்ஸ், நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர் மிட்ச் மெகானல் முதலான முன்னணி குடியரசுக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், குடியரசுக் கட்சி ஒன்றுபட்டு இருப்பதாகவும், ஒரு சில அதிகார வர்க்க அரசியல் தலைவர்கள் மட்டும்தான் தன்னை எதிர்ப்பதாகவும், தான் கட்சியின் மையமான புள்ளியாக இருப்பதாகவும் டிரம்ப் காட்டிக் கொண்டுள்ளதாக தி கார்டியன் கூறுகிறது. அரசியல் குழுவின் மாநாட்டில் அனைத்து பேச்சாளர்களும் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெகுமக்கள் சீர்குலைவுவாதி டிரம்ப் போய் விட்டார் – ஆனால், டிரம்ப்வாதம்?

டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், அவரது ஆளுயரத்துக்கும் அதிக உயரமான தங்க சிலை ஒன்றை மாநாடு நடந்த ஹோட்டலின் வழியாக அணி வகுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 55% பேர் 2024-ல் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ஆவதற்கு டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 21% பேர் ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசான்டிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“ஜோ பைடன் ஆட்சியின் முதல் மாதம், நவீன அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு அதிபரின் முதல் மாதத்தையும் விட மோசமானது” என்று கூறிய டிரம்ப், “பைடனின் குடியேற்ற கொள்கைகள் சட்ட விரோதமானவை மட்டுமல்ல, அவரை தார்மீக விரோதமானவை, நமது நாட்டின் மையமான மதிப்பீடுகளுக்கு துரோகம் இழைப்பவை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க – மெக்சிகோ எல்லையை கடக்கும் குடியேறுபவர்களை கடுமையாக கையாள வேண்டும், எல்லையில் தடுப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தனது கொள்கையை ஆதரித்து அவர் பேசியுள்ளார்.

“சீனாவை எதிர்க்க வேண்டும், அயலகப் பணி முறையை ஒழித்துக் கட்ட வேண்டும், நமது தொழிற்சாலைகளையும், வழங்கல் சங்கிலிகளையும் திரும்ப கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தனது கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாநாடு நடந்த மேடையின் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதன் தனித்துவமான வடிவமைப்பு, ஹிட்லரில் நாஜிக் கட்சி பயன்படுத்திய புராதன ஐரோப்பிய சின்னங்களில் ஒன்றான ஒதாலா ரூன் என்பதுடன் ஒப்பிடும்படியாக உள்ளது என்று ஆயிரக்கணக்கான பேர் ட்வீட் செய்துள்ளனர். “ஆரிய கடந்தகாலம்’ என்ற மாயையை உருவாக்க நாஜிக்கள் இந்த சின்னத்தை பயன்படுத்தினர் என்று தெரிவிக்கிறது தி கார்டியன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்