Aran Sei

” இது வரை பார்த்திராத புதுவகை டைனோசர் ” – விஞ்ஞானிகளின் ஆச்சரியம்

Ubirajara jubatus. - Image Credit : Wikimedia Commons

11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு நீர்நிலையின் கரைகளில், இரண்டு கால் கொண்ட, கோழி அளவிலான, ஒரு டைனோசர் பூச்சிகளையும், தவளைகள், பல்லிகள் போன்றவற்றையும் உண்டு வாழ்ந்து வந்திருக்கிறது.

அதன் உடலின் உள்பகுதி அந்த காலகட்டத்துக்கு முந்தைய ஜூராசிக் கால டைனசோர்களைப் போலவே எலும்புக்கூட்டைக் கொண்டுள்ளது. ஆனால், அதன் வெளிப்புறம் மிகவும் வேறுபட்டதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுவதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது

“உபிரஜாரா ஜூபாடஸ்” என்று அழைக்கப்படும் இந்த டைனோசர் “முடி போன்ற நீட்சிகளாலான” பிடரி மயிர் அமைப்புகளையும், மிகவும் தனித்துவமான இரண்டு “ரிப்பன் போன்ற உறுப்புகளையும்” பெற்றுள்ளது. இந்த ரிப்பன் போன்ற உறுப்புகள் முடி, விரல் நகங்கள் ஆகியவற்றை உருவாக்கும் கெராட்டினால் ஆனதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

“பல வினோதமான டைனோசரர்கள் உள்ளன. ஆனால், இந்த டைனோசர் அவை எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டது” என்று இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் மார்ட்டில் கூறியுள்ளார். இந்த ஆய்வை நடத்திய குழுவின் அறிக்கை ஆய்வு இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

“உபிரஜாராவின் முடி போன்ற அமைப்புகள் இறகுகளின் முன்னோடி வடிவம் என்று அழைக்கப்படுகிறது. அவை உண்மையில் முடி இல்லை, முடி என்பது பாலூட்டிகளுக்கு மட்டுமே தனிச்சிறப்பான அம்சமாகும்.

பல டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தன, இன்றைய பறவைகள் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இறகுகளைக் கொண்ட சிறிய டைனோசர்களிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தன என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

உபிரஜாராவின் ரிப்பன் போன்ற அமைப்புகள் வெளிப்புறத் தோற்றத்துக்காக, இணையை கவர்வதற்கும், எதிரிகளை மிரட்டுவதற்கும் பயன்பட்டிருக்கலாம் என்று மார்ட்டில் கூறியுள்ளார். இத்தகைய தோற்றங்கள் ஆண் விலங்குகளால் வெளிப்படுத்தப்படுகின்றன, எனவே, இந்த உபிரஜாரா ஒரு ஆண் ஆக இருந்திருக்கலாம் என்று மார்ட்டில் அனுமானிக்கிறார்.

“தோளில் இருந்து வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் இந்த ரிப்பன்களை இதுவரை இயற்கையில் நான் பார்த்திராதவை” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த தொல்படிவத்திலிருந்து சொல்ல முடியாவிட்டாலும், உபிரஜாரா வண்ணமயமாக இருந்திருக்கலாம் என்று மார்ட்டில் கூறுகிறார். இந்த தொல்படிவம் 1990-களின் தொடக்கத்தில் ஒரு அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது என்று சயின்ஸ் நியூஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்