Aran Sei

” கருப்பின உயிர்கள் முக்கியமானவை ” – ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

image credit : ndtv.com

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை ஒரு மாத காலம் வரை நடைபெறும் என்றும், அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது காவல்துறை வன்முறை தொடர்பான இந்த வழக்கு உலக அளவில் கவனம் பெற்றுள்ளதாகவும் தி கார்டியன் கூறியுள்ளது.

சென்ற ஆண்டு மே 25-ம் தேதி, ஒரு கடையில் $10 கள்ள நோட்டை கொடுத்ததாக போலீஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, கைவிலங்கு மாட்டப்பட்ட, கருப்பினத்தவரான 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில், டெரிக் சாவின், தனது முட்டியை அழுத்தி மூச்சுத் திணற வைக்கும் வீடியோ உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

image credit : wellesley.edu
“கருப்பின உயிர்கள் முக்கியமானவை” image credit : wellesley.edu

இனவெறிக்கு எதிரான “கருப்பின உயிர்கள் முக்கியமானவை” என்ற இயக்கத்தை அது தூண்டியது.

44 வயதான டெரிக் சாவின் மீது கொலை, இறப்பை ஏற்படுத்தவது ஆகிய பிரிவுகளின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான நீதிமன்ற விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது.

ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தின் மீது, டெரிக் சாவின் 9 நிமிடங்களுக்கும் மேல், தன் கால் முட்டியை ஊன்றி நிற்கும் வீடியோவை நீதிமன்றத்தில் காட்டிய அரசுத் தரப்பின் ஒரு வழக்கறிஞர் ஜெர்ரி பிளாக்வெல் “இது ஒரு கொலை” என்று கூறினார் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

அவரது இறப்புக்கு இட்டுச் சென்ற அத்தகைய அபாயகரமான பிடியை ஜார்ஜ் ஃப்ளாய்ட் மீது டெரிக் சாவின் வைத்திருந்ததற்கான எந்த நியாயமும் இல்லை என்று நிரூபிக்க முயற்சிக்கின்றனர், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் போதை மருந்துகளை உட்கொண்டிருந்ததாகவும், அவரது இறப்புக்குக் காரணம் போதை மருந்துகளும், ஏற்கனவே இருந்த நோயும்தானே தவிர, மூச்சுத் திணறல் அல்ல என்று டெரிக் சாவின்-ன் வழக்கறிஞர் திங்கள் அன்று வாதிட்டுள்ளார்.

“என்ன செய்ய வேண்டும் என்று தான் பயிற்றுவிக்கப்பட்டதைத்தான் டெரிக் சாவின் செய்தார் என்பதை நிரூபிப்போம்” என்று அவரது வழக்கறிஞர் எரிக் நெல்சன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

கொலைக் குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டால், 19 ஆண்டு போலீஸ் துறை அனுபவம் குடைய டெரிக் சாவின்-க்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

“மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்” – டார்னெல்லா பிரேசியர்

நேற்று நீதிமன்றத்தில், ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை வீடியோவில் பதிவு செய்த பதின்ம வயது பெண் டார்னெல்லா பிரேசியர் சாட்சியம் அளித்தார்.

ஜார்ஜ் பிளாய்ட் தனது உயிருக்காக மன்றாடினார் என்றும், ஜார்ஜ் பிளாய்டை தரையில் அழுத்தி வைத்திருந்த டெரிக் சாவின் அழுத்தத்தை குறைக்கவே இல்லை என்றும், அந்த கொலையை நினைத்து இன்றும் தான் தூக்கம் இழப்பதாகவும் அவர் சாட்சியத்தில் கூறியுள்ளார்.

டார்னெல்லாவின் 9 நிமிடங்களுக்கும் அதிகமான வீடியோவில் தரையில் எந்த பாதுகாப்புமின்றி வீழ்த்தப்பட்டிருக்கும் ஜார்ஜ் பிளாய்ட் மூச்சு விட முடியவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறிய பிறகும் டெரிக் சாவின் அதை புறக்கணித்து மேலும் ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்தது தெரிகிறது.

“நேரடியாக தலையிட்டு அவரது சாவை தடுக்கத் தவறியதற்காக நான் மீண்டும் மீண்டும் ஜார்ஜ் பிளாய்டிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று உணர்ச்சி வசத்தால் விசும்பியபடி டார்னெல்லா பிரேசியர் சாட்சி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான டார்னெல்லா பிரேசியருக்கு அப்போது வயது 17.

சுற்றி நின்றவர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் டெரிக் சாவின் அதை பொருட்படுத்தவில்லை என்று டார்னெல்லா பிரேசியர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார். “மாறாக, அவர் மேலும் வலுவாக தனது கால்முட்டியை ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் அழுத்தினார்” என்று அவர் கூறியுள்ளார்.

“உதவி செய்ய அனுமதிக்கவில்லை” – ஜெனவீவ் ஹேன்சன்

அவசர நிலை மருத்துவ பயிற்சி பெற்றிருந்த மின்னியபோலிஸ் தீயணைப்புப் படை வீரரான ஜெனவீவ் ஹேன்சன் தான் ஜார்ஜ் பிளாய்டுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கு போலீஸ் அனுமதிக்கவில்லை என்று சாட்சி அளித்துள்ளார்.

“அவர் நகரவே முடியவில்லை, அவரது கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது. மூன்று பெரிய ஆண்கள் அவர் மீது தமது எடையை அழுத்துவது அளவுக்கு அதிகமானது. அவரது விழிப்புநிலை மாற்றமடைந்திருந்தது என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை” என்று அவர் கூறியுள்ளார். தனது பயிற்சியின்படி அவருக்கு உடனடியாக உதவி தேவை என்பதை உணர்ந்ததாக ஜெனவீவ் ஹேன்சன் கூறியுள்ளார்.

“அவருக்கு நாடித்துடிப்பு இன்னும் இருக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்” என்று கூறிய அவர், தன்னை ஒரு தீயணைப்புப் படை வீரர் என்று தெரிவித்துக் கொண்டு, டவ் தாவ் என்ற இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் ஜார்ஜ் பிளாய்டுக்கு உதவ அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். டவ் தாவ், சுற்றியிருந்தவர்களை நெருங்க விடாமல் தடுத்து டெரிக் சாவின்-க்கு பாதுகாப்பாக இருந்தார்.

தன் கண் முன்னே ஒரு மனிதர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று உணர்ந்ததாக ஜெனவீவ் ஹேன்சன் தெரிவித்துள்ளார்.

நிறவெறியால் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 200 கோடி இழப்பீடு: கறுப்பினத்தவரின் மரணம் இனி கேட்பாரற்று கடந்து போகாது

போலீஸ் செய்த கொலையை போலீசுக்கு தெரிவித்த தற்காப்பு கலை போராளி

ஒரு தற்காப்பு கலை போராளியான டொனால்ட் வில்லியம்ஸ், ஜார்ஜ் பிளாய்ட் மீதான அபாயகரமான கழுத்து நெரிப்பை நிறுத்தும்படி டெரிக் சாவின் இடம் தான் கேட்டதாக சாட்சி கூறியுள்ளார்.

தன்னை அதில் தலையிட முடியாதபடி டவ் தாவ் தடுத்து விட்டார். தன்னை மார்பில் கைவைத்த ஓரமாக டவ் தாவ் தள்ளி விட்டார் என்று டொனால்ட் வில்லியம்ஸ் நீதிமன்றத்தில் சாட்சி கூறியுள்ளார்.

ஜார்ஜ் பிளாய்ட் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட போது, டொனால்ட் வில்லியம்ஸ் 911 அவசர உதவி சேவைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். ஒரு குற்றச் செயல் நடந்ததாக தான் கருதியதை அவர் பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ பதிவும் நீதிமன்றத்தில் ஒலிக்கப்பட்டுள்ளது.

டவ் தாவ்-ம், டெரிக் சாவின் உடன் இருந்த இன்னும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் தனியாக வழக்கு நடக்கவுள்ளது. அவர்கள் மீது கொலைக்கு உதவி செய்து ஆதரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்