Aran Sei

அமேசான் பழங்குடிகளின் பாதுகாவலர் அம்பு தைத்து மரணம்

Image Credits: TV6

அமேசானில் வெளியுலக தொடர்பின்றி வாழும் பழங்குடிகளை ஆராய்ந்து வந்த முன்னணி நிபுணர் ரியலி பிரான்சிஸ்கடோ, நெஞ்சில் அம்பு துளைத்து இறந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமேசான் மழைக்காடுகளுக்குள்  தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினக் குழுவை, வெளியாட்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அவர் கொல்லப்பட்டதாக  பிரான்சிஸ்கடோவின் நண்பர்கள் கூறியுள்ளார்கள்.

மேற்கு பிரேசிலிய மாநிலமான ரொண்டேனியாவில் உள்ள உரு யூ வாவ் வாவ் எனும் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பின் விளிம்பில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. சட்டவிரோதமாகக் காடுகளை அழிப்பவர்களும் சுரங்கத் தொழில் செய்பவர்களும் இப்பகுதியை ஆக்கிரமிக்க முயல்கிறார்கள். அவ்வப்போது பண்ணை விவசாயிகள் காட்டுக்கு தீ வைப்பதால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சிஸ்கடோ உடன் பயணித்த காவலர் பாலோ ரிக்கார்டோ ப்ரெஸாதான் இந்த கொலையை நேரில் கண்ட சாட்சி. பிரான்சிஸ்கடோ இந்த நிலப்பரப்பில் ஊடுருவ முயல்கிறார் என்று (பழங்குடிகள்) தவறாக நினைத்து அவரை தாக்கியிருக்கக் கூடும் என்று ப்ரெஸா யூகிக்கிறார்.

ஏதும் புதிய பழங்குடியினரின் நடமாட்டம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பிரான்சிஸ்கடோ ஒரு மலையில் ஏறினார் என்று ப்ரெஸா கூறியுள்ளார்.

“அவரது மார்பினைத் துளைத்த அம்பின் சத்தம் எங்களுக்குக் கேட்டது. அவர் சத்தமிட்டபடி, அம்பினை பிடுங்கி எறிந்துவிட்டு, பின்னோக்கி ஓடத் துவங்கினார். 50-60 மீட்டர்  ஓடிய அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார், பின்னர் அவரது உயிர் பிரிந்தது” என்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஒலிப் பதிவு ஒன்றில் ப்ரெஸா கூறியுள்ளார்.

பிரேசில் அரசாங்கத்தின் பூர்வகுடிகள் உறவுகளுக்கான நிறுவனமான ஃபனாயில் பணியாற்றிய பிரான்சிஸ்கடோ (56) தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடிக் குழுக்கள் மற்றும் அவர்களின் வன நிலங்களின் பாதுகாவலர் எனும் புகழைப் பெற்றவர்.

இவரது மரணம் “மிகவும் சோகமானது” என்றும் “அளவிட முடியாத இழப்பு” என்றும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ‘சர்வைவல் இன்டர்நேஷனல்’ எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

“பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்புகளைக் காப்பாற்ற அவர் அயராது பாடுபட்டார்” என்றும் “அமேசான் மழைக்காடுகளையும் அதன் சிறந்த பாதுகாவலர்களையும் அழிக்கும் வன்முறை பேராசையை ஏற்க மறுத்தார்” என்றும் சர்வைவல் இன்டர்நேஷனல் கூறியுள்ளது. ”பிற வெளியாட்களது ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட காடுகளைக் காப்பாற்ற அயராது பாடுபட்டார்” என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது

பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடைபிடிக்கும் அமேசான் பழங்குடியினரைப் பரந்த பிரேசிலிய சமூகத்துடன் இணைக்கும் முயற்சி மற்றும் அமேசானின் இயற்கை வளங்களை சூறையாடும் செயல், போன்றவற்றுக்கெதிராக போராடும் வனப் பாதுகாவலர்கள் மத்தியில், பிரான்சிஸ்காடோவின் மரணம் ஆழ்ந்த கவலையை உருவாக்கி உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்களை தகர்ப்பதன் மூலமும்,  பழங்குடியனரது நிலங்களை ஆக்கிரமிக்க விரும்புகின்றவர்களின் தைரியத்தை அதிகரிக்க செய்வதன் மூலமும் அமேசானில்  வன்முறையைத் தூண்டுகிறார் அதிபர் என்றும் இவர்கள் குற்றசாட்டுகின்றனர். பிரேசில் நாட்டில் அமேசான் காட்டிற்குள் அடிக்கடி தீ பற்றுவதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்த மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில், பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் 12,412 காட்டுத்தீ பரவல்களைக் கண்டறிந்தன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. இவற்றில் பல, ஏற்கனவே காடுகள் அழிக்கப்பட்ட நிலங்களில் இருக்கும் பழங்குடியினரை அகற்ற  சட்டவிரோத பண்ணை விவசாயிகளால் வைக்கப்பட்ட தீதான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்