Aran Sei

” கியூபா பயங்கரவாதத்தைத் தூண்டும் நாடு ” – டிரம்ப் அரசு

Image Credit : theguardian.com

யங்கரவாதத்துக்கு அரச ஆதரவு அளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலில் கியூபாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு சேர்த்துள்ளது என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் பதவிக் காலம் இன்னும் ஒரு சில நாட்களே நீடிக்கும் நிலையில், கடைசி நேரத்தில் கியூபாவை “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசு” என்று வகைப்படுத்தியுள்ளது, அடுத்த அதிபர் ஜோ பைடனின் அரசு கியூபாவுடன் உறவுகளை புதுப்பிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கார்டியன் கருத்து தெரிவிக்கிறது.

இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையை, டிரம்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, திங்கள் கிழமை அறிவித்துள்ளார். இதன்படி, ஈரான், வட கொரியா, சிரியா ஆகிய நாடுகள் அடங்கிய பட்டியலில் கியூபாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு, கியூபாவை அந்தப் பட்டியலில் இருந்து 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் அரசாங்கம் நீக்கியிருந்தது.

கியூபா, “சர்வதேச பயங்கரவாத செயல்களுக்கு மீண்டும் மீண்டும் ஆதரவு தெரிவிப்பதாகவும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதாகவும்” மைம் பாம்பியோ தனது நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துள்ளார்.

“இந்த பிராந்தியம் முழுவதிலும் தீய நடத்தைகளில் ஈடுபடுவதாக” அவர் கியூபா மீது குற்றம் சாட்டியுள்ளார். அதிபர் டிரம்ப் ஆட்சியிலிருந்து தூக்கி எறிய முயற்சித்து தோல்வியடைந்த வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுராவுக்கு கியூபா ஆதரவு அளிப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால், பெரும்பான்மை அரசியல் பார்வையாளர்களும் அமெரிக்காவின் பல கூட்டு நாடுகளும், கியூபா பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது என்ற டிரம்ப் அரசின் கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கார்டியன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கியூபா பயங்கரவாதத்துக்கு அரச ஆதவு அளிக்கும் நாடு என்ற அமெரிக்காவின் இரட்டை முகம் கொண்ட, இழிவான அறிவிப்பை நாங்கள் கண்டனம் செய்கிறோம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“அமெரிக்காவின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை பயங்கரவாதம் என்ற கசப்பான யதார்த்தம் குறித்தும், அதனால் பாதிக்கப்படுபவர்கள் குறித்தும் நேர்மையாக அக்கறை கொண்டவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“இவை புனையப்பட்ட குற்றச்சாட்டுகள்” என்று மூத்த தென் அமெரிக்க ஆய்வாளர் கிறிஸ்டோபர் சபாடினி கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த நடவடிக்கை, கியூபாவின் எல்லைப் பகுதி மாநிலமான ஃபுளோரிடாவில் உள்ள, கியூபாவுக்கு எதிரான கடும் கொள்கையை ஆதரிப்பவர்களுக்கு டிரம்ப் தனது ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் வழங்கும் என்கிறார் அவர்.

இதே அடிப்படையில்தான், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கும் அவர்களது தாய்வான் சக அதிகாரிகளுக்கும் இடையே தொடர்புகளுக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டன என்று கிறிஸ்டோபர் சபாடினி தெரிவித்துள்ளார் என்று கார்டியன் செய்தி கூறுகிறது. இந்த நடவடிக்கை சீனாவின் கோபத்தைத் தூண்டி, அடுத்து அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவிருக்கும் ஜோ பைடனுக்கு தொல்லை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்கிறார் அவர்.

“வெளியாறும் இராணுவப் படைகள், வயல்களில் புதைகுண்டுகளை பரப்பி விட்டுப் போவது போன்றது” என்று கூறும் சபாடினி, “இத்தகைய அரசியல் புதைகுண்டுகளை வைப்பதன் மூலம், வரப் போகும் ஜோ பைடன் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதை சிரமமாக்குகிறார், டிரம்ப். இது ஜோ பைடனின் கொள்கை விருப்பங்களை மட்டுப்படுத்துகிறது” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்