Aran Sei

கம்யூனிஸ்ட்களுக்கு தடை – ‘அமெரிக்கா இதைச் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்’

Image Credits: National Review

மெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அதன் கொள்கை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதன்படி வெளிநாட்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்சிஐஎஸ் கொள்கை கையேட்டில், கொள்கை வழிகாட்டலை வெளியிடுவதாக, யுஎஸ்சிஐஎஸ் கூறியது. அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி ஒரு கொள்கை வரைவு வெளியானது. அதில் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது வேறு ஏதேனும் சர்வாதிகாரக் கட்சியின் உறுப்பினராகவோ அல்லது தொடர்பிலோ இருந்தால் அதன் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அனுமதி மறுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல் “அனைத்து வெளிநாட்டு கம்யூனிஸ்ட் காட்சிகளையும், எந்தவொரு வெளிநாட்டு அரசியல் அல்லது புவியியல் உட்பிரிவுகளிலிருக்கும் கம்யூனிஸ்ட் காட்சிகளையும்” உள்ளடக்கியது.

கம்யூனிஸ்ட் அல்லது வேறு எந்த சர்வாதிகாரக் கட்சியுடனும் உறுப்பினராக இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை என்பது அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட பரந்த சட்டங்களின் ஒரு பகுதியாகும், என்று யுஎஸ்சிஐஎஸ் கூறியுள்ளது.

“பொதுவாக, விலக்கு அளிக்கப்படாவிட்டால், கம்யூனிஸ்ட் அல்லது வேறு எந்த சர்வாதிகாரக் கட்சியுடன் (அல்லது உட்பிரிவு அல்லது துணை), உள்நாட்டு அல்லது வெளிநாட்டினருடன் உறுப்பினராக அல்லது இணைந்திருக்கும் எந்தவொரு புலம்பெயர்பவரும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதலில் விருப்பமின்றி உறுப்பினர் ஆனவர்களுக்கான விலக்கு அடங்கும். அதாவது, “வேலைவாய்ப்பு, உணவுப் பொருட்கள் அல்லது பிற அத்தியாவசியமான பொருட்களுக்காக” கட்சியில் சேர்ந்த ஒருவருக்கு விலக்கு அளிக்கப்படும்.

குடிவரவு மற்றும் தேசிய சட்டம் 1952, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை அனுமதிக்க மறுப்பது, அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், புதிய வழிகாட்டுதல் இதில் விலக்கு அளிப்பதற்கான கொள்கை அமலாக்கத்தை புதுப்பித்துள்ளது.

இதுகுறித்து அரண்செய்யுடன் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிந்தன் “இது போன்று அமெரிக்கா செயல்படுவது முதல் முறை அல்ல. தங்களை ஒரு முதலாளித்துவ சக்தியாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, கம்யூனிசத்தை ஒரு தீமையாக சித்தரிக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை,” என்று கூறினார்.

“உலகமே கியூபாவை பாராட்டும்போதும், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டின்படி கியூபா ஒரு மோசமான நாடாக உள்ளது. கம்யூனிசம் சிறிய சக்தி, அதன் வரலாறு முடிந்துவிட்டது என்று தொடர்ந்து எழுதிவந்த அவர்களால் முதலாளித்துவத்தை ஒரு மாற்றாக நிறுவ முடியவில்லை,” என்றும் அவர் கூறினார்.

“முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கிவருகிறது. மக்களுக்கு கம்யூனிசம் மேல் ஈர்ப்பு கூடி வருகிறது. அவர்களின் ஆற்றாமை காரணமாக அவர்கள் இதனை செய்து வருகிறார்கள். அவர்கள் இதனை செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம்,” என்றும் சிந்தன் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்