Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?

டிரம்ப் ஆதரவாளர், எதிர்ப்பாளர் மோதல் - Image Credit : theguardian.com

மெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்டமான அதிகாரபூர்வ தேர்வாளர் குழு சந்திப்பு இன்று நாடு முழுவதிலும் மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் மாநில வாரியாக தேர்வாளர் குழுக்களில் பெரும்பான்மை பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ளாத அவருடன் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளரும் இப்போதைய அதிபருமான டொனால்டு ட்ரம்புக்கு இது மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று தி கார்டியன் கருத்து தெரிவித்துள்ளது.

ஜோ பைடனை 46-வது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கவிருக்கும், இந்தத் தேர்வாளர் குழுக்களில் முன்னாள் அதிபர் பில் கிளின்டன், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரும் அடங்குவார்கள்.

மாநில வாரியான வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 தேர்வாளர் குழு வாக்குகளையும், டொனால்டு ட்ரம்ப் 232 தேர்வாளர் குழு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த முடிவுகளை 50 மாநிலங்களும் வாஷிங்டன் டிசியும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அங்கீகரித்து விட்டன என்று சிஎன்என் தெரிவிக்கிறது.

வழக்கமாக இன்று நடைபெறவுள்ள இந்த வாக்களிப்பு நிகழ்வு எந்தக் கவனத்தையும் பெறுவதில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் அமெரிக்க மக்களின் தேர்வை எப்படியாவது மாற்றி விடலாம் என்று முயற்சிக்கும் டொனால்ட் ட்ரம்பின் செயல்பாடுகளால் இது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்று கார்டியன் கூறுகிறது.

“இதுதான் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசடியான தேர்தல்” என்று ட்ரம்ப் ஞாயிற்றுக் கிழமை ட்வீட் செய்துள்ளார்.

நான்கு மாநிலங்களில் ஜோ பைடனுக்கு ஆதரவான முடிவை மாற்றுவதற்காக டெக்சாஸ் மாநிலம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்திருந்தது ட்ரம்பின் முயற்சிகளுக்குப் பின்னடைவாக முடிந்தது.

விஸ்கான்சின் மாநிலத்தில் 2 லட்சம் வாக்குகளை செல்லாது என்று அறிவிக்கக் கோரும் ட்ரம்ப் தரப்பின் வழக்கு, “இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது” என்று அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் செய்துள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தின் இந்த வழக்கை குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 126 பேரும் (மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு), 18 மாநிலங்களைச் (மொத்தம் 50 மாநிலங்கள்) சேர்ந்த குடியரசுக் கட்சி அரசு வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

க்வின்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், 77% குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் நவம்பர் 3 தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக நம்புகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான பிளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கார்டியன் செய்தி கூறுகிறது.

இத்தகைய பிளவுகளால் ஏற்பட்ட கேடு, பல்வேறு நகரங்களில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையேயான வன்முறை மோதலாக முடிந்துள்ளது என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ட்ரம்ப் ஆதரவாளர்களைக் கொண்ட தீவிர வலதுசாரி குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் மோதியதில் இந்த வன்முறை வெடித்திருக்கிறது. “திருட்டைத் தடுப்போம்” என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ட்ரம்ப் தனது முழு ஆதரவை தெரிவித்திருந்தார்.

மோதிக்கொள்ளும் எதிரெதிர் தரப்பினர் – Image Credit : theguardian.com

ஒரு தீவிர வலதுசாரி வன்முறை அமைப்பான “பிரௌட் பாய்ஸ்” குழு, தலைநகரின் ட்ரம்ப் ஹோட்டல் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது. அதன் 200 உறுப்பினர்கள், இராணுவச் சீருடைகளையும், குண்டு துளைக்காத சட்டைகளையும் அணிந்துகொண்டு, வெள்ளை இனவாதிகள் பயன்படுத்தும் கை சின்னங்களைக் காட்டினார்கள் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

எதிர்த்தரப்பான ஆன்டிஃபா போராட்டக்கார்கள் மீது வசவு மழை பொழிந்த அவர்கள், “கறுப்பினத்தவர் வாழ்வும் முக்கியமானது” (Black Lives Matter) இயக்கத்தின் கொடிகளை எரித்தனர். மாலை வரையில், போலீஸ் இரு தரப்பையும் மோதவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால், இருள் சூழ்ந்த பிறகு மோதல் வெடித்துள்ளது.

வாஷிங்டன் மாநிலத் தலைநகரான ஒலிம்பியாவில் வன்முறை வெடித்தது. ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் சுடப்பட்டார், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்ஜியா மாநிலத்தில் ஜார்ஜியா பாதுகாவல் படை என்ற தீவிர வலதுசாரி குழு சனிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளது என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

ட்ரம்ப் தரப்பு தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்குச் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முயற்சிகள் செய்த ஜார்ஜியா, பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின், நெவாடா, அரிசோனா மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றதாக கார்டியன் தெரிவிக்கிறது.

“இன்று 50 மாநிலங்களிலும் வாக்காளர் குழு ஜோ பைடனை முறையாக அதிபராகத் தேர்ந்தெடுத்த பிறகு, ட்ரம்பை ஆதரிக்கும் பலர் தமது எதிர்ப்பைக் கைவிட்டு விடுவார்கள்” என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க முன்னாள் துணை அதிபரும் 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் தோற்றவருமான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அல் கோர் சிஎன்என்-டம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்