Aran Sei

சாதிய ஒடுக்குமுறை – சிஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான வழக்கு திரும்ப பெறப்பட்டது

சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக, சிஸ்கோ (Cisco Systems Inc) நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, கலிபோர்னியா மாகாண தொழிலாளர் சமூக பாதுகாப்பு அமைப்பு (Department of Fair employment and Housing) தானாகவே திரும்ப பெற்றுள்ளது. இந்த வழக்கு மாகாண நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று தொழிலாளர் சமூக பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாக சான் ஃபிரான்சிஸ்கோ க்ரானிகள் செய்தி வெளியிட்டுள்ளது.

சிஸ்கோவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி அமெரிக்கரை, அதில் பணியாற்றும் உயர்சாதியை சேர்ந்த இரண்டு மேலாளர்கள், சாதி அடிப்படையில் பாகுபாடு செய்வதற்கு நிறுவனம் அனுமதித்ததாக, ஜூன் மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பணியாளர் சட்டம் குறிப்பாக சாதி ஒடுக்குமுறையை தடை செய்யவில்லை. இருந்தபோதும், கலிஃபோர்னியாவின் தொழிலாளர் சமூக பாதுகாப்பு அமைப்பு தாக்கல் செய்த மனுவில், இந்து நம்பிக்கையில் நீடித்திருக்கும் சாதி அமைப்பு, மதத்தைபோல, பாகுபாடுகளை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்திருந்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவர் சான் ஜோஸ் நகரில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் தலைமையகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் முதன்மை பொறியாளராக பணியாற்றிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர், சாதி அடுக்கில் கீழ் நிலையில் உள்ள, ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட, தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தி வயர் கூறுகின்றது.

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்படும் நிறுவனங்களில் பெரும்பாலும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் பணியாற்றுவதுபோல், சிஸ்கோவிலும் பணியாற்றுவதாகவும், அவர்களின் பெரும்பான்மையினர் பிராமணர்கள் அல்லது பிற உயர்சாதியை சேர்ந்தவர்கள் என்று தி வயர் குறிப்பிட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்