Aran Sei

நேபாளம் சென்றுள்ள சீனக் குழு – ‘ கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவை தவிர்க்க முயற்சி’

Image Credit : thehindu.com

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் குவோ யேசௌ தலைமையில் ஒரு உயர்மட்ட அரசுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நேபாள தலைநகர் காத்மாண்டு போய்ச் சேர்ந்துள்ளது.

இக்குழுவினர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகளுடன் உரையாடலை நடத்தவுள்ளனர். சீனக் குழு, முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் தலைமையிலான அதன் எதிரணியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் சந்திக்கும் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு! 

“சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டுமல்லாமல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ/ சிபிஎம்) மற்றும் வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சியுடனும் எங்களுக்குச் சகோதர உறவு உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். சமீபமாக நேபாளத்தில் சில கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதால், அது குறித்து எங்களது கருத்துக்களை, வருகை தரும் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளோம்” என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுத் துறை துணைத் தலைவர் ராம் கார்கி தெரிவித்துள்ளார்.

பிரதமர் கே.பி ஒளி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர் புஷ்பா கமல் தஹால் பிரச்சந்தா-நேபாள பிரிவுகளுக்கு இடையே ஒத்துழைப்பை கொண்டுவரும் முயற்சியில் சீன குழு காத்மாண்டுவுக்கு சென்றுள்ளது. நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இது ஒரு சவாலான பணியாகத் தோன்றுகிறது.

வருகை தரும் தூதுக்குழு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகளை வழிநடத்தும் கட்சியின் இணைத் தலைவர் புஷ்பா கமல் தஹால் “பிரச்சந்தா” மற்றும் பிரதமர் கே.பி.சர்மா ஒளியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக இரு பிரிவுகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளதால் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று இச்செய்தி கூறியுள்ளது.

பல மாத காலமாக இரு தரப்பினருக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவிய போது, ​​நேபாளத்துக்கான சீனத் தூதர் ஹூ யான்கி தான் கே.பி.சர்மா ஒளி மற்றும் பிரச்சந்தாவுக்கு இடையே ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்