Aran Sei

சீனா: கட்டாய உழைப்பில் 5 லட்சம் உய்குர் இஸ்லாமியர்கள்

Image Credits: BBC

சீனாவின் வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் லட்சக்கணக்கான இன சிறுபான்மையினர் கையால் பருத்தியை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது அரசின் ஒரு தொழிலாளர் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ஜியாங் பிராந்தியத்தில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் அதிகமாக உள்ளன என்று மனித உரிமை ஆர்வலர்கள்  தெரிவிப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இங்கு, குறைந்தது 10 லட்ச மக்கள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான தொழில் பயிற்சி மையங்களே இங்கு உள்ளதாகச் சீன அரசு வாதிடுகிறது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட ‘உலகளாவிய கொள்கைக்கான மையம்’ (Center for Global Policy) எனும் சிந்தனைக் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இணைய தளத்தில் கிடைக்கும் அரசு ஆவணங்களை ஆராய்ந்து இந்த அறிக்கையை அது தயாரித்துள்ளது.

அதில், 2018-ம் ஆண்டு, உய்குர் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மூன்று பகுதிகளிலிருந்து குறைந்தது 5,70,000 பேர் கையால் பருத்தியை எடுக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது அரசு நடத்தும் கட்டாய தொழிலாளர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல லட்சக்கணக்கானோர் பருத்தியை பறிக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளார்கள். உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் பருத்தியில் 20 சதவீதம் சின்ஜியாங் பிராந்தியத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடுமையான கண்காணிப்பு

அனைத்து தொழிலாளர்களும் மையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக சீன அரசு கூறுகிறது. ஆனால் பல முன்னாள் முகாம் வாசிகள் திறன் குறைவான தொழிற்சாலை வேலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை பெரும்பாலும் முகாம்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஆவணங்களை ஆதரமாகக் கொண்டு, தொழிலாளர் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் காவல்துறையினரால் பெருமளவு கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் இராணுவ பாணியில் மேலாண்மை செய்யப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்குக் கருத்தியல் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பருத்தியை எடுப்பதற்காகத் தொழிலாளர்களை இடம் மாற்றி அழைத்துச் செல்வது, கட்டாய உழைப்புக்கான அதிக ஆபத்தை உள்ளடக்கியது என்பது தெளிவாகிறது” என்று, இந்த ஆவணங்களை கண்டுபிடித்த, ஏட்ரியன் ஜென்ஸ் அறிக்கையில் எழுதியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்