சென்ற சனிக்கிழமை மதியம், 32 வயதான ஜேசன் நைட்டிங்கேல் என்பவர் அமெரிக்காவின் சிக்காகோ நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளார்.
சிக்காகோவின் ஹைட்பார்க் பகுதியில் ஒரு கார் நிறுத்தும் இடத்தில் தனது காரில் உட்கார்ந்திருந்த, சீனாவைச் சேர்ந்த சிக்காகோ பல்கலைக் கழக மாணவர் யீரன் ஃபான், சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு சற்று முன்னர் சுடப்பட்டார். யீரன் ஃபான் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் வணிகம் மற்றும் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவர்.
அதன் பிறகு ஜேசன் நைட்டிங்கேல், அடுத்த தெருவில் இருந்த ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு பெண் பாதுகாவல் அதிகாரியையும், தனது தபால்களை எடுத்துக் கொண்டிருந்த 77 வயதான பெண்ணையும் சுட்டுள்ளார். பாதுகாவல் அதிகாரி மருத்துவமனையில் உயிரிழந்தார், வயதான பெண் உயிருக்குப் போராடி வருகிறார்.
அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டிடத்துக்குள் சென்ற ஜேசன் நைட்டிங்கேல், அவருக்குத் தெரிந்த ஒருவரின் காரை திருடிச் சென்றுள்ளார்.
அதன் பிறகு, ஒரு மளிகைக் கடையில் அவர் சுட்டதில் 20 வயதான ஒருவர் கொல்லப்பட்டார், 81 வயதான ஒரு பெண் தலையிலும், கழுத்திலும் படுகாயமடைந்தார், அவர் இப்போது உயிருக்குப் போராடி வருகிறார்.
கடையிலிருந்து வெளியில் வந்த ஜேசன் நைட்டிங்கேல், தனது அம்மாவுடன் காரில் சென்று கொண்டிருந்த ஒரு 15 வயது பெண்ணைச் சுட்டிருக்கிறார். அந்தப் பெண் இப்போது நெருக்கடியான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், அந்த மளிகைக் கடைக்குத் திரும்பிச் சென்ற ஜேசன் நைட்டிங்கேல், அங்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகள் மீது சுட்டிருக்கிறார். அதில் யாரும் காயமடையவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
அங்கிருந்து 10 மைல் தொலைவில் உள்ள, சிக்காகோவுக்கு அருகில் உள்ள, ஈவான்ஸ்டன் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்ற ஜேசன், ஒரு மருந்துக் கடைக்குள் சென்று, தான் கடையை கொள்ளையிடப் போவதாகச் சொல்லி பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அது யார் மேலும் படவில்லை என்று போலீஸ் தெரிவிக்கிறது.
அங்கிருந்து தெருவின் மறுபக்கம் இருந்த ஐஹாப் உணவகத்துக்குச் சென்ற ஜேசன், ஒரு பெண்ணை கழுத்தில் சுட்டிருக்கிறார். அவர் மோசமான நிலைமையில் உள்ளதாக ஈவான்ஸ்டன் போலீஸ் அதிகாரி டெமிட்ரஸ் குக் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவகத்திலிருந்து வெளியேறிய ஜேசன் நைட்டிங்கேலை, கார் நிறுத்தும் இடத்தில் எதிர் கொண்ட போலீஸ் படையினர், அதன் பின் நடந்த மோதலில் அவரை சுட்டுக் கொன்றனர் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.
செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ஜேசன் நைட்டிங்கேலின் நண்பர்கள் அவர் இரட்டைக் குழந்தைகளின் அன்பான அப்பா என்றும், அவர் கவர்ச்சியான ஆளுமையும் நகைச்சுவை உணர்வும் படைத்தவர் என்றும் கூறியுள்ளனர். சமீபகாலமாக, அவர் வாழ்வில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈவான்ஸ்டன் அருகில் உள்ள ரோஜர்ஸ் பார்க் பகுதியில் ஒரு திரைப்பட விழாவில் அவரைச் சந்தித்ததாகக் கூறும் டாம்மி டெய்லர் என்பவர், “எனக்கு அவர் அறிமுகமான இத்தனை ஆண்டுகளில், எப்போதுமே நல்ல மனிதராகவும், நகைச்சுவை நிரம்பியவராகவுமே அவரை அறிவேன். அவர் இப்படி உடைந்து போவதற்கு ஏதோ நடந்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஜேசன் நைட்டிங்கேல் ஏன் இத்தகைய தொடர் கொலைகளைச் செய்தார் என்பது பற்றி சிக்காகோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் கொல்லப்பட்டவர்களை இலக்கின்றி தேர்ந்தெடுத்ததாகத் தெரிவதாக போலீஸ் கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.