Aran Sei

இரண்டாவது முறையாக அதிபர் ஆவாரா ட்ரம்ப்? – நிபுணர்களின் விளக்கம்

Image Credits: The Indian Express

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார், இதனை குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்பும் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும் ஏற்க மறுக்கின்றனர்.

ட்ரம்பும் பிற குடியரசுக் கட்சியினரும் ஆட்சியில் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் எனும் கவலை பரவலாக உள்ளது. “ட்ரம்பின் நிர்வாகம் இரண்டாவது முறையும் சுமூகமாக அமைக்கப்படும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செவ்வாயன்று தெரிவித்துள்ளார். அரசு வழக்கறிஞர் வில்லியம் பாரும் தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். இதன் காரணமாக வில்லியம் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவை அனைத்தும் நடந்த பிறகும் ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்பதற்கான விளக்கம்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார் என்பதை டொனால்ட் ட்ரம்ப் ஏற்க மறுத்துவிட்டார். அவர் ஒரு சதித்திட்டத்தை தீட்டி பதவியில் தொடர்வதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் வாய்ப்பு உள்ளதா?

உண்மையில் இல்லை. டிசம்பர் 14 அன்று அதிபருக்கு வாக்களிக்க தேர்வு குழு கூடுகிறது. கிட்டத்தட்ட அணைத்து மாநிலங்களிலும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்வு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதிபர் ஆவதற்கு 270 வாக்குகள் தேவைப்படுகிறது. பைடன் அதை விட அதிகமான வாக்குகளை பெறுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஒரே மாநிலம் வெற்றியை தீர்மானிக்காது. மேலும், மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின், பென்சில்வேனியா, அரிசோனா ஆகிய மாநிலங்களில் பைடன் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ளார். இந்த மாநிலங்களில் அவரை தோற்கடிப்பது கடினம்.

மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா போன்ற மாநிலங்களில் மக்கள் வாக்குகளைப் புறக்கணித்துவிட்டு வேறு தேர்வு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்று தேர்தலுக்கு முன் குடியரசுக் கட்சி கூறியது. இதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாகவும் குடியரசுக் கட்சி தெரிவித்தது. தேர்வு குழு கூடும் நாள் வரை வாக்குகள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் இவ்வாறு செய்யலாம். அதற்கு சட்டத்திலும் இடம் உண்டு. ஆனால் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. பைடன் பெரும்பான்மை வகிக்கும் இந்த மாநிலங்களில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் தேர்வு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

“அமெரிக்கா தொடர்ந்து சட்ட விதிகளைப் பின்பற்றினால், ட்ரம்ப் அதிபராக நீடிப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ரிச்சர்ட் ஹசன் தெரிவித்துள்ளார். “மக்களின் வாக்குகளை புறக்கணித்து, சட்டத்தை தவறாக பயன்படுத்தி பதவியில் நீடிப்பது ஜனநாயக விரோத செயல். அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்தஒரு மாநிலத்திலும் வாக்காளர்களின் விருப்பத்திற்கு மாறாக தேர்வு குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது பெரும் எதிர்ப்புகளை சந்திக்கும். ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என்றால், பல மாநிலங்களில் வாக்காளர்களின் விருப்பத்தை மீறவேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால் அது ஜனநாயக விரோத போக்காக இருக்கும்.

“இவர்களுக்கு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தோல்வி அடைந்த மாநிலங்களில் வெற்றிபெற வேண்டும் எனும் பல கற்பனைகள் உள்ளன. ஆனால், இவை வெறும் கற்பனை தான். இது ஒருபோதும் நடைபெறாது” என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் ரிச்சர்ட் பில்ட்ஸ் கூறியுள்ளார்.

குடியரசு கட்சியினர் என்ன செய்ய உள்ளார்கள்?

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பென்சில்வேனியா மாநில செனட் உறுப்பினர் ஜேக் கோர்மன், தேர்தல் நடைபெற்ற மறுநாள் பேசும்போது தனது கட்சி ‘சட்டத்தைப் பின்பற்றும்’ என்று அவர் கூறினார். அதாவது, மக்கள் வாக்குகளை பெற்றவர்கள் தேர்வு குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறினார். அக்டோபர் மாதம் பேசிய அவர், மாநில சட்டமன்றத்தால் “தேர்வு குழு உறுப்பினரை தேர்ந்தெடுக்கவோ அதிபர் தேர்தலின் முடிவை தீர்மானிக்கவோ முடியாது” என்று கூறியுள்ளார்.

ஆனால் செவ்வாயன்று, பென்சில்வேனியா சட்டமன்றத்தில் குடியரசுக் கட்சியினர் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால், நடவடிக்கை ஆபத்தானது. ஏனெனில் இது மக்களின் வாக்குகளை புறக்கணிக்கும் முயற்சியின் தொடக்கமாக அமையலாம்.

இதற்கும் ட்ரம்ப் தாக்கல் செய்யும் வழக்குகளுக்கும் ஏதேனும் வகையில் தொடர்புள்ளதா?

ட்ரம்ப்பின் குழு தேர்தல் நாளிலிருந்து சட்டரீதியாக சந்தேகத்திற்குரிய வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகளின் நோக்கம், தேர்தல் முடிவுகளை முறியடிப்பது அல்ல. நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி வாக்கு எண்ணப்படும் காலத்தை நீடிப்பதே இதன் நோக்கம்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு காலக்கெடு உள்ளது. பின்னர் தேர்வு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் முடிவுகள் வெளியிடப்படுவதை ட்ரம்பின் குழு தடுக்க முயல்கிறது.

காலக்கெடு முக்கியமானது. ஏனெனில் இந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் முடிவுகளே இறுதியானது என்று சட்டம் சொல்கின்றது. இதில் தாமதத்தை ஏற்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிக்கிறது.

இருப்பினும், 10 நாட்களுக்குள் வாக்குகள் என்னப்பட்டுவிடும். நீதிமன்றம் அந்த செயல்முறையை நிறுத்துவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை.

இழுபறி நீடித்தாலும், அரசியலமைப்பின் விதிகளின் படி, ஒரே காலக்கெடுவை நிர்ணயிக்கும் கட்டாயம் இல்லை. வாக்குகள் தாமதமாக எண்ணப்பட்டாலும் அதிபர் மற்றும் துணை அதிபரின் பதவி காலம் ஜனவரி 20-ம் தேதி நண்பகலில் முடிவடையும். அதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை என்றால் சபையின் பேச்சாளர், நான்சி பெலோசி தற்காலிக அதிபராக பதவி ஏற்கலாம்.

(தி கார்டியனில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்