Aran Sei

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அலமேடா கவுன்டி – அமெரிக்காவின் 7-வது நகர மன்றம்

Image Credits: Amar Ujala

மெரிக்க மாநிலமான கலிஃபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கைச் சேர்ந்த அலமேடா கவுன்டி இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அலமேடா கவுன்டி சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள மிகப்பெரிய கவுன்டிகளில் ஒன்றாகும். அது 16 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. மாநிலத்தின் 7-வது அதிக மக்கள் தொகை கொண்ட கவுன்டியாக உள்ள அலமேடாவில் சான்பிரான்சிஸ்கோ பே பகுதியில் உள்ள 14 நகரங்கள் அடங்குகின்றன.

சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில், கேம்பிரிட்ஜ், அல்பேனி, செயின்ட் பால், ஹேம்டிராம்க் ஆகிய 6 நகர மன்றங்கள் ஏற்கனவே இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அந்த வரிசையில் அலமேடா கவுன்டியின் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று clarionindia.net இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தை முழுமையாக பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்

பிரகடனம்

கலிஃபோர்னியா மாநில, அல்மெய்டா கவுன்டி, மேற்பார்வையாளர்கள் வாரியம்

அல்மெய்டா கவுன்டியின் தெற்கு ஆசியச் சமூகத்துக்கு ஆதரவான பிரகடனம்

அல்மெய்டா கவுன்டி மேற்பார்வையாளர்கள் வாரியம், அனைத்து மக்களுக்கும் பொதுவான மனித உரிமைகளை ஆதரிப்பதுடன் சாதி, மத, இன, பால், தேசிய இன அடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்க்கிறோம் என்பதாலும்;

இந்தியாவும் அமெரிக்காவும், மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சி, மற்றும் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலான ஒரு பொதுவான பிணைப்பைப் பகிர்ந்துகொள்கின்றன என்பதாலும்;

அமெரிக்க சர்வதே மதச் சுதந்திர ஆணையம் தனது 2020 ம் ஆண்டு அறிக்கையில், இந்தியாவை “குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு” என்று அறிவித்துள்ளது. அந்த நாடு அமைப்பு ரீதியான, தொடர்ந்து நடக்கும், அதிர்ச்சியூட்டும் மதச் சுதந்திரத்தின் மீதான அத்துமீறலை நடத்தி வருகிறது, சகித்துக்கொள்கிறது என்று கூறியுள்ளது என்பதாலும்;

2019, டிசம்பர் 11 அன்று, இந்தியா நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், மத அடிப்படையில் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டைத் திருத்துவதாக உள்ளது என்பதாலும்;

ஆகஸ்ட் 2019 ல் இந்தியா வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 லட்சம் மக்கள் தக்க ஆவணங்கள் மூலம் தங்கள் இந்தியக் குடியுரிமையை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் கூட்டாகச் சிறைப்பிடிக்கப்பட்டு இந்திய அரசு கட்டி வரும் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்பதாலும்

பெரும்பாலான இந்தியர்களிடம், குடியுரிமையை நிரூபித்துக்கொள்ளத் தேவையான பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இல்லை. மேலும் என்ஆர்சி யை நாடு முழுவதும் விரிவாக்கினால் கோடிக்கணக்கானவர்கள் (மிக அதிகமாக முஸ்லிம், தலித், பெண்கள் மற்றும் பூர்வ குடிமக்கள்) சிஏஏ வின் படி குடியுரிமை மறுக்கப்படுவார்கள். அந்த நிலையில் அவர்கள் மறு குடியமர்த்தப்பட வேண்டிய நிலை உருவாகும் என்பதாலும்

“இந்திய உள்துறை அமைச்சர் அசாமில் பயன்படுத்தப்பட்ட சரிபார்த்தல்களைப் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்போவதாகவும் போலவே பிற மாநிலங்களிலும் சோதனை நடத்தப்போவதாகவும் அதன் மூலம் குடியுரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து “ஊடுருவியவர்கள்”, “கறையான்கள்” ஆகியோரை ஒழித்துக் கட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார்” என நியூயார்க் டைம்ஸ் 2019, டிசம்பர் 22 அன்று செய்தி வெளியிட்டுள்ளது என்பதாலும்

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அவை, உலகம் முழுவதும் உள்ள அகதிகள் பிரச்சனைகளால் திணறி வரும்போது, என்ஆர்சி முன்னெப்போதும் இருந்திராத வகையில், மிகப் பெரும் அளவில் அகதிகள் நெருக்கடியை உருவாக்கிவிடும் என்பதாலும்

ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நாடிழந்தவர்களாக அறிவிக்கப்பட்டு மிகப் பெரும் தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டுள்ளனர் என்பதாலும்

டிசம்பர் 2019-ல், நடைபெற்ற, என்ஆர்சி- சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போது, உத்தரப்பிரதேச மாநில அரசு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்தது உட்பட பல அடக்குமுறைகளை அரசு ஏவியுள்ளது என்பதாலும்

2020, ஜனவரி 8-ம் நாள் நாடு முழுவதும் இந்திய குடிமக்கள் அரசின் கொள்கைகளை எதிர்த்தும், என்ஆர்சி- சிஏஏ எதிர்த்தும் போராட்டங்களை நடத்தி உள்ளனர் என்பதாலும்

தெற்கு ஆசியச் சமூகத்தின் அனைத்து சாதி, மத, இனங்களையும் வரவேற்கும் அல்மெய்டா கவுன்டியுடன் இந்தியாவின் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை பொருந்தவில்லை என அல்மெய்டா கவுன்டி நம்புகிறது என்பதாலும்.

அல்மெய்டா கவுன்டி, அனைவரையும் வரவேற்கும் கவுன்டியாக இருப்பதால், சாதி, மத, இன, பால், இனத் தோற்ற வேறுபாடுகளைக் கடந்து தெற்கு ஆசியச் சமூகத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. என்பதை அல்மெய்டா கவுன்டி மேற்பார்வையாளர்கள் வாரியம் தற்போது மீண்டும் உறுதிசெய்கிறது எனப் பிரகடனப்படுத்துகிறோம்.

மேலும், முஸ்லிம்கள், அடக்கப்படும் சிறுபான்மைச் சாதியினர் ,பெண்கள், பூர்வீகக் குடிகள் ஆகியோருக்கிடையே பாகுபாடு காட்டுவதால் குடியரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் இந்திய குடிமக்கள் தேசியப் பதிவேடு ஆகியவற்றையும், அத்துடன், உலகின் எந்தப் பகுதியிலும், வாழும் எளிய மக்களை நாடற்றவர்களாக்கும், பலி ஆடுகளாக்கும் மற்றும் வன்முறைக்கும், பாகுபாட்டிற்கும் இலக்காக்கும் எந்த முயற்சியையும், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மனித உரிமை மீறல்களையும் அல்மெய்டா கவுன்டி மேற்பார்வையாளர்கள் வாரியம் எதிர்க்கிறது என்பதையும் பிரகடனப்படுத்துகிறோம்.

ரிச்சர்ட் வால்லே, தலைவர்
மேற்பார்வையாளர், 2வது மாவட்டம்

கெய்த் கார்சன், துணைத் தலைவர்
மேற்பார்வையாளர், 5வது மாவட்டம்

ஸ்காட் ஹேகர்டி
மேற்பார்வையாளர், முதல் மாவட்டம்

வில்மா சான், மேற்பார்வையாளர்
மூன்றாவது மாவட்டம்

நேட் மிலே,
மேற்பார்வையாளர், நான்காவது மாவட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்