Aran Sei

பிரேசிலில் மோசமாகும் கொரோனா நெருக்கடி – வலதுசாரி பிற்போக்கு அமைச்சர் பதவி விலகல்

image credit : theguardian.com

சீனாவுடனும் அமெரிக்காவுடனும் உறவுகளை பாழ்படுத்துவதன் மூலம் பிரேசில் மக்களின் உயிர்களை அபாயத்தில் தள்ளியதாக வெளியுறவுத் துறை அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமர்சித்ததைத் தொடர்ந்து பிரேசில் நாட்டின் அதிதீவிர வலதுசாரி வெளியுறவுத் துறை அமைச்சர் எர்னஸ்டோ அரவ்ஜோ நேற்று பதவி விலகியுள்ளார்.

3.12 லட்சம் பிரேசில் மக்களை பலி வாங்கிய கொரோனா நோய்த்தொற்று இந்த மாதம் மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 27 மாதங்களாக வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் உள்ள எர்னஸ்டோ அரவ்ஜோ மீதான எதிர்ப்பு இறுதியில் வெடித்து விட்டது என்று தி கார்டியன் குறிப்பிடுகிறது. சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான உறவை அவர் தவறாக கையாண்டதன் காரணமாக பிரேசிலுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை போதுமான அளவில் பெற முடியவில்லை என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சனிக்கிழமை அன்று, கொரோனா நோய்த்தொற்றினால் பிரேசிலின் தினசரி இறப்பு எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியது. சென்ற வியாழக் கிழமை, புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் ஒரே நாளில் 1 லட்சத்தைத் தாண்டியதாக பிரேசிலின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது நெருக்கடி மோசமானதை வெளிப்படுத்தியது என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

எர்னஸ்டோ அரவ்ஜோ பதவி விலகிய சில மணி நேரங்களிலேயே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ அஸ்வடோவும் பதவி விலகியுள்ளார். இது வலதுசாரி அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவின் அரசுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி என்று தி கார்டியன் கருத்து தெரிவித்துள்ளது.

வலதுசாரி பழமைவாத போல்சனோரோ அரசு கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை முறையாகக் கையாளாதது தொடர்பாக கடும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது.

எனக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை – பிரேசில் அதிபர்

53 வயதான எர்னஸ்டோ அரவ்ஜோ சீன அதிபர் ஷி ஜின்பிங்-ஐ கடுமையாக விமர்சிப்பதற்கும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பக்திக்கும் புகழ் பெற்றவர். 2018-ம் ஆண்டில் ஜெய்ர் போல்சோனாரோ அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எர்னஸ்டோ அரவ்ஜோவை வெளியுறவுத் துறை அமைச்சராக தேர்ந்தெடுத்தார்.

வலதுசாரி தேசியவாதிகளான அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் நரேந்திர மோடி போன்றவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்ட எர்னஸ்டோ அரவ்ஜோ, சீனாவுடனான உறவுகளை நெருக்கடியில் தள்ளினார்.

பிரேசில் – இடதுசாரி முன்னாள் அதிபர் லூலா மீதான பொய் வழக்குகள் தள்ளுபடி – இப்போதைய வலதுசாரி அதிபருக்கு சவால்

2020-ம் ஆண்டு இந்திய குடியரசு தின பேரணியில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : theprint.in
இந்திய குடியரசு தின பேரணியில் கலந்து கொண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ – image credit : theprint.in

எர்னஸ்டோ அரவ்ஜோ அமைச்சராக இருந்த 3 ஆண்டுகளில் பிரேசில், குழந்தைப் பேறு உரிமைகள், சுற்றுச் சூழல் போன்ற பிரச்சினைகளில் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை எடுத்தது. பிரேசிலின் கடும் வலதுசாரி சித்தாந்தவாதிகளின் கூடாரமாக மாறியது என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

‘கொரோனா தடுப்பு மருந்து உங்களை முதலைகளாக மாற்றலாம்’ – மக்களை எச்சரித்த வலதுசாரி அதிபர்

டொனால்ட் டிரம்ப்-ஐ “மேற்குலகின் நாயகர்” என்று துதிபாடிய எர்னஸ்டோ அரவ்ஜோ, சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை பலமுறை கடுமையாக தாக்கினார், கொரோனா நோய்க்கிருமியை “சீன வைரஸ்” என்று அழைத்தார் என்று தி கார்டியன் சுட்டிக் காட்டியுள்ளது.

சமீபத்தில், ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் புகுந்த டிரம்ப் ஆதரவு தீவிர கும்பலை “நேர்மையான குடிமக்கள்” என்று அழைத்திருந்தார், அவர்.

சென்ற வாரம் நடந்த ஒரு நாடாளுமன்ற விவாதத்தின் போது மேலவை உறுப்பினர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரை கண்டித்தனர், ஒரு உறுப்பினர், “பதவி விலகுங்கள், நீங்கள் உயிர்களை காப்பாற்றுவீர்கள்” என்று எர்னஸ்டோ அரவ்ஜோவுக்குக் கூறினார் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

சில நாட்களுக்குப் பிறகு பிரேசிலின் வெளியுறவுத் துறை அதிகாரிகள், எர்னஸ்டோ அரவ்ஜோ பிரேசிலின் நலன்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

“பிரேசில் இதுவரை பார்த்த வெளியுறவுத் துறை அமைச்சர்களிலேயே மிக மோசமானவர் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை” என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் செல்சோ அமோரிம் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்