Aran Sei

” ஜனநாயகத்தை தினம் தினம் தாக்குபவர்களை சகித்துக் கொள்ளக் கூடாது ” – பிரேசில் அதிபரை பதவி நீக்கம் செய்ய அழைப்பு

image credit : theguardian.com

பிரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சானாரோவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது “ஆட்சிக் கவிழ்ப்பு வேட்டையும், சர்வாதிகார மயக்கங்களும்” உண்மை ஆவதற்கு முன் இதைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போல்சானாரோ ராணுவத்தை தன்னுடன் சேர்த்துக் கொள்வதற்கு சட்ட விரோதமாக முயற்சிப்பதை கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது பதவிநீக்கத்தை கோரியுள்ளனர். “இந்த காட்டுமிராண்டித்தனத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மார்சலோ பிரைக்சோ கூறியுள்ளார்.

கடந்த திங்கள் அன்று, பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெர்னாண்டோ அஸ்வடோவை அதிபர் போல்சானாரோ பதவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, செவ்வாய் காலையில் ராணுவத்தின் தரைப்படை, வான்படை, கடற்படை பிரிவுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களையும் அவர் நீக்கியது  உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான பிரேசில் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாக தி கார்டியன் கூறியுள்ளது.

“ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துவதற்கான அதிபரின் ஒரு முயற்சி இது. அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் எதிர்வினை ஆற்றுகிறோம்” என்று நாடாளுமன்ற கீழவையின் எதிர்க்கட்சித் தலைவரான அலெசாண்ட்ரோ மொலன் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பரவலில் இதுவரை 3.2 லட்சம் பிரேசில் மக்கள் உயிரிழந்ததற்கு பகுதியளவு காரணமான அதிபர் பொல்சனாரோவின் நிர்வாகமும் அலட்சியமும் ராணுவ தளபதிகளை கடுப்பேற்றியிருந்தது என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

எனக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை – பிரேசில் அதிபர்

இது பிரேசிலின் ஜனநாயக பயணத்தின் ஒரு முக்கியமான தருணம் என்று பிரேசில் நிபுணரும் அமெரிக்காஸ் காலாண்டு இதழின் தலைமை ஆசிரியருமான பிரையன் வின்டர் கூறியுள்ளார்.

“அடுத்த ஆண்டு தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெற முடியாவிட்டால் தனக்கு உதவுவதற்காக ராணுவ தலைமையில் தனக்கு இணக்கமான நபர்களை நியமிக்க போல்சானாரோ முயற்சிக்கிறார்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான லூலா டி சில்வா மீண்டும் அரசியல் களத்தில் தோன்றியிருப்பதும் அதிபர் போல்சானாரோவின் வெற்றியை நிச்சயமற்றதாக்கியுள்ளது என்று தி கார்டியன் கூறுகிறது.

பிரேசில் – இடதுசாரி முன்னாள் அதிபர் லூலா மீதான பொய் வழக்குகள் தள்ளுபடி – இப்போதைய வலதுசாரி அதிபருக்கு சவால்

2003 முதல் 2011 வரை பிரேசில் அதிபராக இருந்த லூலா டி சில்வா மீது ஊழல் வழக்கு காரணமாக 2018 தேர்தலில் அவர் போட்டியிட முடியவில்லை. அந்த வழக்கு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே, 2020 தேர்தலில் ஜெய்ர் போல்சானாரோவை எதிர்த்து டி சில்வா போட்டியிடுவது உறுதி என்று தி கார்டியன் கருதுகிறது.

அதிபர் போல்சானாரோவை பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அர்லிண்டோ சினாலியா, சமூகம் அதிபரின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக அணி திரண்டால்தான் பதவி நீக்க முயற்சி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

பிரேசிலில் மோசமாகும் கொரோனா நெருக்கடி – வலதுசாரி பிற்போக்கு அமைச்சர் பதவி விலகல்

“ஜனநாயகத்தை தினம் தோறும் தாக்கிக் கொண்டிருப்பவர்கள் மீது அளவுக்கு அதிகமாக சகிப்புத் தன்மையை காட்டுவது எப்போதுமே சரியான வழி இல்லை” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜனநாயகத்தை போற்றும் குடிமக்கள் இந்த அச்சுறுத்தலை எதிர்த்து நிற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்