இங்கிலாந்தில் கொரோனா நோய்க்கிருமி புதிய பரிணாம மாற்றம் பெற்று வேகமாக பரவி வருவதால், ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருவதை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்திருக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய போரிஸ் ஜான்சன், இந்த ஆண்டு முதல் பாதியில் இந்தியா வர முயற்சிப்பதாகவும், இரு தரப்பு உறவுகள் வலுவாக தொடர்வதற்கு பணியாற்றப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து அடங்கிய ஐக்கிய முடியரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்த ஆண்டு முதல் வெளியேறி விட்ட நிலையில், பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை போட வேண்டிய நிலையில் ஐக்கிய முடியரசு உள்ளது.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருவதும், மோடி இங்கிலாந்துக்குச் செல்வதும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை போடுவதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு மாற்று விருந்தினரை, இந்திய அரசு அடையாளம் காண வேண்டும். நோய்த்தொற்றின் காரணமாக கொண்டாட்டங்கள் குறுக்கப்பட்ட அளவிலேயே நடைபெறும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
2013-ம் ஆண்டில் ஓமன் சுல்தான் கபூஸ் பின் செயித் அல் செயித், தகவல் தொடர்பு பிரச்சினை காரணமாக வர முடியாமல் போன போது, மாற்றாக பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யல் வாங்சுக் கலந்து கொண்டார். 2019-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ள வர முடியாத போது, இந்தியா தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசாவுக்கு அழைப்பு விடுத்து அவர் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஜி7 குழு நாடுகளின் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். அதற்கு முன்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக மோடியிடம் தெரிவித்ததாக, போரிஸ் ஜான்சனின் அலுவலகம் வெளியிட்ட பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.