Aran Sei

அமெரிக்காவில் கருப்பினத்தவர் சுட்டுக்கொலை – பற்றி எரியும் ஃபிலடெல்ஃபியா

மெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த 27 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.

திங்கட்கிழமையன்று காப்ஸ் கிரீக் என்ற இடத்திலிருந்து காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கு சென்ற காவல்துறையினர் கையில் கத்தியுடன் வால்டர் வேலஸ் இருந்ததை பார்த்ததாகவும் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தான்யா லிட்டில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் கத்தியை கீழே போடச் சொன்னதாகவும், ஆனால் அதையும் மீறி வால்டர் கத்தியுடன் அவர்களை நோக்கி நடந்து வந்ததால், இரண்டு காவலர்கள் அவரை பலமுறை சுட்டதாக தான்யா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் வாலசின் நெஞ்சு மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை சுட்ட காவலர்களில் ஒருவர் அவரை உடனடியாக வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதில் காவல்துறையின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், தீ வைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

கல் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, துப்பாக்கிச் சூடு நிகழ்வை படம் பிடித்த ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அதில், வால்டர் வேலஸ் காவர்களை நோக்கி நடந்து வருவதும், காவலர்கள் துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டிக்கொண்டே பின்னால் செல்வதும் பதிவாகியுள்ளது. வால்டரின் தாய், அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.  கத்தியை கீழே போடும்படி காவலர்கள் சத்தம் போடுவதும் பதிவாகியுள்ளது. திடீரென்று இரண்டு காவலர்கள் வால்டரை நோக்கி சுடுவதும், அவர் நிலை குலைந்து கீழே விழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதேபோல், வெள்ளையர் ஒருவர் கத்தியுடன் காவலர்களை மிரட்டும் வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவரை காவலர்கள் கையாளும் விதத்தையும், வால்டர் வாலசை காவலர்கள் கையாண்டன விதத்தையும் ஒப்பிட்டு காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த மே மாதம் 26-ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபோலீஸ் நகரத்தில், ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தை சேர்ந்தவர், காவலர் ஒருவரால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ (black lives matter) என்ற பெயரில், கருப்பின மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்