அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு, சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர்.
மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு அதிபராக முடியும்.
அந்த வகையில் ஜோ பைடன் இதுவரை வெற்றிக்கு அருகே 264 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் ஜோ பைடன் வெற்றிக்கு 7 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேசமயம், அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பாப்புலர் ஓட்ஸ் என்று அழைக்கப்படும் பொதுமக்கள் அளித்த வக்குகளில், ஜோ பைடன் 50.5 சதவீத வாக்குகள் அதாவது 7 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அதிபர் டொனால்டு ட்ரம்ப் 47.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், நியூ ஹெமிஸ்ஃபயர் ஆகிய மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார்.
ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் பதிவைக் குறிப்பிட்டு “இது அபத்தமானது. ட்ரம்ப் தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாகச் செயலாற்ற வேண்டும். இதற்காக அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும். அமைதியாகுங்கள் ட்ரம்ப். அமைதியாகுங்கள்” என்று கிராட்டா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
So ridiculous. Donald must work on his Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Donald, Chill! https://t.co/4RNVBqRYBA
— Greta Thunberg (@GretaThunberg) November 5, 2020
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டிருந்தது. இதனை அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
”இது அபத்தமானது. கிரெட்டா தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாகச் செயலாற்ற வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும்” என்று டிரம்ப் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்பு அவர் குறிப்பிட்ட அதே வார்த்தைகளைக் குறிப்பிட்டு ட்விட்டரில் ட்ரம்பிற்கு, கிரெட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.