Aran Sei

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

Image Credits: Reuters

ங்களாதேஷ் கடற்படைக் கப்பல்கள் சுமார் 1,600 ரோஹிங்கியா அகதிகளை வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தொலைதூரத் தீவுக்குக்கொண்டு சென்றுள்ளன என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. கட்டாயத்தின் பெயரால் இது நடப்பதாக அகதிகளும் மனித உரிமைக் குழுக்களும் இதற்கு எதிராகப் புகார் அளித்த போதும் பங்களாதேஷ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய இஸ்லாமியச் சிறுபான்மையினர். பாசன் சார் செல்ல விரும்பும் அகதிகளை மட்டுமே அங்கு கொண்டு செல்வதாகப் பங்களாதேஷ் கூறுகிறது. இதன் மூலம் சுமார் 10 லட்ச ரோஹிங்கியாக்கள் இருக்கும் முகாம்களில் கூட்டம் குறையும் என்றும் பங்களாதேஷ் அரசு கூறியுள்ளது.

சில ரோஹிங்கியாக்கள் பாஷன் சார் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று அகதிகளும் மனித உரிமைக் குழுக்களும் தெரிவித்துள்ளன. பாஷன் சார் என்பது 20 ஆண்டுகளுக்கு முன் கடலிலிருந்து தோன்றிய ஒரு தீவாகும். இங்கு வெள்ள அபாயங்கள் அதிகம் உண்டு.

தெற்குத் துறைமுகமான சிட்டகாங்கிலிருந்து, ஒன்பது படகுகள் புறப்பட்டதாக ஒரு கடற்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஏழு படகுகளில் ரோஹிங்கிய அகதிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளில் இதரப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

“அரசு யாரையும் பாஷன் சார் நோக்கி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லவில்லை. இதை நாங்கள் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அப்துல் மோமன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், பாஷன் சார் நோக்கிச் செல்ல அரசு அதிகாரிகள் தயாரித்த பட்டியலில் தங்களின் பெயர் அனுமதியின்றி இணைந்ததாக இரண்டு ரோஹிங்கியாக்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், பாஷன் சாருக்குச் செல்ல அரசு அதிகாரிகள் தங்களைக் கட்டாயப்படுத்தியதாக உதவிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காக்ஸ் பஜார் அருகே உள்ள முகாம்களிலிருந்து பஸ்ஸில் ஏறும்போது 31 வயதான ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். “அவர்கள் எங்களைப் பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” என்று அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

“அரசின் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கான பெயர்ப் பட்டியல் என்று நினைத்து எனது கணவர் எங்களின் பெயர்களைக் கொடுத்துவிட்டார்” என்று 18 வயதான ஒரு பெண் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டாய இடம்பெயர்வை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. இது அடிப்படை உரிமை மீறல் என்றும் அவை குற்றம்சாட்டியுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்