Aran Sei

கருக்கலைப்பு உரிமைக்கான சட்டம் – அர்ஜென்டினாவில் நிறைவேற்றம்

ர்ஜென்டினா, பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான உரிமைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியிருக்கும் நான்காவது லத்தீன் அமெரிக்க நாடாகியுள்ளது என அல்-ஜசீரா இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

செவ்வாய் அன்று, அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் நடந்த பன்னிரண்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள், கருக்கலைப்பு உரிமை மசோதாவின் மீது வாக்களித்தனர். கருக்கலைப்பு  உரிமை மசோதாவிற்கு 38 வாக்குகள் ஆதரவாகவும், 29 வாக்குகள் எதிராகவும் பதிவு செய்யப்பட்டு, அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டபூர்வமாக்கப்பட்டது.

லத்தீன் அமெரிக்காவில் நிலவும் கத்தோலிக்க மத ஆதிக்கத்தை எதிர்த்து இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது பாலின சமத்துவத்திற்கு முக்கியமான நகர்வு என கார்டியன் தளம் சொல்கிறது.

கருக்கலைப்பு உரிமை மசோதா தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்த நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

“ நாங்களும், நாங்கள் நேசிக்கும் மக்களும் கருக்கலைப்பு உரிமை இல்லாததால் சந்தித்த பிரச்சனைகள் பல. இந்த உரிமை எங்களுக்கு கிடைக்க நிறைய நாட்கள்  ஆகியுள்ளது, ஆனால், அது இப்போது எங்களுக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கிறது” என அர்ஜெண்டினாவை சேர்ந்த விவியானா ரியாஸ் அல்வராடோ, 25, தெரிவிக்கிறார்.

மதம் தேசபக்தி பெயரால் பெண்கள் உரிமை மறுப்பு – போலந்தில் பரவும் போராட்டம்

நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான உரிமையை எதிர்ப்பவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவ ஆலய முறையில் பிரசங்கம் நடத்தி, மசோதா நிராகரிக்கப்பட வேண்டும் என ஜெபித்துக் கொண்டிருந்தனர் என்கிறது அல்-ஜசீரா. 

கருக்கலைப்பு உரிமைக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது என்ற அறிவிப்பு வெளியான போது, கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த மக்கள் திரள் பச்சை கொடியை அசைத்து தங்கள் வெற்றியை கொண்டாடினர். பச்சை புகை சூழ உணர்ச்சிகரமான தருணமாக அந்த வெற்றி இருந்ததென அல் ஜசீரா தெரிவிக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூபா, உருகுவே மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளில் மட்டும் தான் கருக்கலைப்பு பெண்ணின் கோரிக்கையின் பேரில் செய்யப்படுகிறது. அர்ஜென்டினாவின் புதிய கருக்கலைப்பு உரிமைச் சட்டம், பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்