Aran Sei

பெண்ணுக்கு மரண தண்டனை – 70 ஆண்டுகளில் முதல்முறையாக நிறைவேற்றப்படவுள்ளது

அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

2004ஆம் ஆண்டு நடந்த கொலை குற்றத்திற்காக லிசா மாண்ட்கோமரி என்ற பெண்ணுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருவுற்றிருந்த பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக லிசா மாண்ட்கோமரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது நிறைவேற்றப்படவுள்ளது.

அமெரிக்காவில் கடைசியாக 1953ஆம் ஆண்டு போன்னி ஹெட்டி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, மரண தண்டனை தகவல் மையம் தெரிவித்துள்ளது. மிசௌரி மாகாணத்தில் விஷவாயு செலுத்தி அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய அரசால் (Federal government) மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது, கடந்த 17 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிரம்ப்பின் அரசு கடந்த ஜூலை மாதம் அதை மீண்டும் தொடங்கியது.

2003ஆம் ஆண்டு வரை மரண தண்டனையை நிறைவேற்ற, மூன்று மருந்துகளை சேர்த்து தண்டனை வழங்கப்படுபவர்களுக்கு செலுத்தி வந்த நிலையில், சிறைத்துறை, கடந்த ஜூலை மாதம், இனி அது ஒரே மருந்தாக இருக்கும் என்று அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் மரண தண்டனைகள் வழங்கப்படத் தொடங்கின.

மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பாக 2008ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

புதிய நடைமுறை அறிமுகப்படத்தப்பட்டதும் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றும் முறைக்கு எதிராக அமெரிக்காவில் நீண்ட நாட்களாக இருந்து வரும் எதிர்ப்பு மீண்டும் மேல் எழுந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம், மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சக்திவாய்ந்த மருந்தை செலுத்துவது, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு சட்டத்திற்கு எதிரான என்று வாஷிங்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதை எதிர்த்து அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மரண தண்டனைகளை நிறைவேற்ற அனுமதியளித்தது.

அந்தவகையில் லிசா மாண்ட்கோமரிக்கு நிறைவேற்றப்படவுள்ள தண்டனை இந்த ஆண்டின் 8வது மரண தண்டனை என்று ராய்டர்ஸ் கூறுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஆள் கடத்தல் மற்றும் கொலை குற்றத்திற்காக லிசாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

லிசாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லிசா மன ரீதியான பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாகவும் கூறியுள்ளார். ஆகவே, லிசாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது சட்டப்படி தவறு என்றும் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்