Aran Sei

நோபல் பரிசு பரிந்துரை – ஆப்கன் பெண் தலைவர் முன்னணியில்

Image Credits: Behan Box

ப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் முதல் பெண் துணை சபாநாயகரும், தலிபான்களுடனான தோஹா அமைதிப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினருமான பாவ்ஸியா கூஃபி, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 9-ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நோபல் பரிசு பெறுவதற்கு “வாய்ப்பு அதிகமானவர்களில்” ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

பாவ்ஸியா கூஃபி இரண்டு படுகொலை முயற்சிகளிலிருந்து தப்பியுள்ளார். பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு கொலை முயற்சியிலிருந்து தப்பிய பாவ்ஸியா, நோபல் பரிசுக்கான பரிந்துரை என்பது சமாதான முன்னெடுப்புகளுக்கான ஒரு “அங்கீகாரம்” என்றும், குறிப்பாக தோஹா பேச்சு வார்த்தைகளில் ஆப்கானியப் பெண்களின் பங்கை இது ‘அங்கீகரிக்கிறது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஆப்கானியப் பெண்களை நல்லிணக்கச் செயல்பாட்டில் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இது ஓர் அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன்,” என தோஹாவில் இருக்கும் பாவ்ஸியா தி இந்துவிடம் கூறியுள்ளார். அவர் இன்று தொடங்கும் அடுத்த சுற்றுப் பேச்சுகளில் பங்கேற்பார்.

“நோபல் பரிசுக்கான பரிந்துரை எனக்கும் எனது மூன்று சகோதரிகளுக்கும் (அணியில் உள்ள மற்ற பெண் பேச்சாளர்கள்) கூடுதல் பொறுப்பை அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் மேலும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண் உரிமைப் போராளி

ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவரான பாவ்ஸியா, 2005-ம் ஆண்டில் முதன்முதலில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதுதான் அவர் பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் நியமிக்கப்பட்டார்.

புதிய வயது விதிகள் அவரைத் தகுதி நீக்கம் செய்ததால் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால், அவர் பெண்களின் உரிமைகளுக்கான வலுவான போராளியாக இருந்து வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான மசோதாவைத் தாக்கல் செய்து, நல்லிணக்கச் செயல்பாட்டில் பெண்களைச் சேர்ப்பதற்காகப் பிரச்சாரம் செய்துள்ளார்.

பாவ்ஸியாவின் தந்தையும் சகோதரரும் தாலிபான் ஆட்சியின் போது (1996-2001) கொல்லப்பட்டனர். அவரது கணவரும் தாலிபான்களால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு அங்கு ஏற்பட்ட நோயால் உயிரிழந்தார்.

அவர் பல முறை போராளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு அவர் சுடப்பட்டார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி, மீண்டும் தோஹா பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், துப்பாக்கி ஏந்தியவர்கள் அவரையும் அவரது மகளையும் சுட்டபோது, ​​ஒரு தோட்டா அவரது வலது கையில் காயம் ஏற்படுத்தியது. இருப்பினும், அவர் கை கட்டுப்போட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

“நான் ஒரு பெண்ணாகக் கருதப்படுவதை விரும்பவில்லை. மேஜையில் அமர்ந்து தனது நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்க சம உரிமை கொண்ட பிரதிநிதியாகவும் அரசியல்வாதியாகவும் கருதப்பட விரும்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, தாலிபான்கள் உண்மையிலேயே சமரசம் செய்யவோ, அரசியல் நோக்கங்களைத் தொடரவோ விரும்பினால், அதனை அவர்கள் வாக்குகள் மூலம் வெல்ல வேண்டும், தோட்டாக்கள் மூலம் அல்ல. அவர்கள் பன்முகத்தன்மையை மதித்து, நாங்கள் புதிய ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றியாளர் யார் என்பது நோர்வே நோபல் கமிட்டியால் வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்படும். நோபல் குழுவின் விதிகளின்படி பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை 50 ஆண்டுகளாக வெளியிடுவதில்லை. மேலும் முன்னணியில் உள்ளோர் பட்டியலும் ‘அதிகாரபூர்வமானது’ அல்ல.

எவ்வாறாயினும், கடந்த வாரம் ஒஸ்லோவில் 20 நோர்வே அமைதி அமைப்புகளைக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான நோர்வே அமைதி கவுன்சில், அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரை செய்யப்பட்டவர்களில் ஐந்து முன்னணியில் உள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 318 வேட்பாளர்களில் பாவ்ஸியா ‘மிக அதிக வாய்ப்புள்ளவராக’ தேர்வாகியுள்ளார்.

‘அதிக வாய்ப்புள்ளவர்களின்’ பட்டியலில் ஊடகச் சுதந்திரக் குழுக்கள், எல்லையற்ற நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் ஆகியோர் அடங்குவர் என்று தி இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது.

“சமாதான முன்னெடுப்புகளில் எங்கள் குரல் கேட்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் பரிசை வென்றாலும் வெல்லாவிட்டாலும், இந்த அங்கீகாரம் பெண்களுக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைவருக்கும் ஒரு பெரிய வெற்றியாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்