Aran Sei

இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை – ஒப்பந்தம் கையெழுத்து

Image Credits: The Indian Express

ன்று நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது உயர்மட்ட இராணுவ தொழில்நுட்பம், வகைப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான தகவல்களைப் பகிர அனுமதிக்கும் என்று ‘ஏஎன்ஐ நிறுவனம்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (பிஇசிஏ) இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் மோதல் நிகழ்ந்துகொண்டிருக்கும் பதட்டமான சூழலில் இது கையெழுத்தாவது, இந்திய அமெரிக்கா இடையில் பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்தும் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

இந்த 2+2 பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் ராணுவத்திற்கிடையிலான நெருங்கிய உறவை மேலும் மேம்படுத்த ஆலோசனை நடத்தியுள்ளனர். இரு நாடுகளையும் பரஸ்பரமாகப் பாதிக்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல சிக்கல்களையும் பரிசீலித்துள்ளனர்.

பிஇசிஏ கையெழுத்தாகி இருப்பது, இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்த உதவும் நான்கு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது.

இராணுவ தகவல் ஒப்பந்தத்தின் பொது பாதுகாப்பு (ஜிஎஸ்ஓஎம்ஐஏ) எனப்படும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் 2002-ல் கையெழுத்திட்டனர். இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்துள்ள முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும், தரங்களை உறுதி செய்வதற்கும் குறிப்பிட்ட நெறிமுறைகளை ஜிஎஸ்ஓஎம்ஐஏ வழங்கும்.

2016-ம் ஆண்டு, பாதுகாப்பு வர்த்தகத்தையும் தொழில்நுட்பப் பகிர்வையும் மேம்படுத்த, இந்தியாவை தனது ‘முக்கிய ராணுவ கூட்டு நாடக’ அமெரிக்க அறிவித்தது.

ஆகஸ்ட் 2016-ல், இந்தியாவும் அமெரிக்காவும் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஒப்பந்தத்தில் (எல்இஎம்ஓஏ) கையெழுத்திட்டன. இது ஒரு நாட்டின் இராணுவத்தை மற்ற நாட்டின் ராணுவ தளங்களில் பணியாற்ற அனுமதிக்கிறது.

2018-ம் ஆண்டு, இந்திய – அமெரிக்க ராணுவங்கள் இணைந்து பணியாற்ற வழி செய்யும் மிக முக்கிய ஒப்பந்தமான தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் ராணுவ தகவல்களை பெறவும், அமெரிக்காவின் உயர் தர வன்பொருள் தொழில் நுட்பங்களை பயன்படுத்தவும் இந்தியாவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “இருதரப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. இதன்மூலம் இருநாடுகளின் பாதுகாப்பு உறவு மேலும் வலுவடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்