Aran Sei

ஆப்கானிஸ்தானில் இனி பெண்களின் பெயர் கெட்டவார்த்தையில்லை

தேசிய அடையாள அட்டையில் தாயின் பெயரை சேர்த்துக்கொள்ள ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பழமைவாத இஸ்லாமியத்தை அடிப்படையாக கொண்ட தாலிபான் அரசு வீழ்த்தப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்த பிறகு, பொதுவெளியில் பெண்களின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் சமூகத்தில், பெண்களின் பெயர்களை பயன்படுத்துவது கௌரவக்குறைவாக பார்க்கப்படுகிறது. திருமண அழைப்பிதழ்களில் கூட மணமகளின் பெயருக்கு பதிலாக அவருடைய தந்தையின் பெயரே குறிப்பிடப்படும் என்று ‘தி வயர்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இறந்தபிறகு அவர்களின் கல்லறையில் கூட அவர்களின் பெயருக்கு பதிலாக அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள ஆணின் பெயரே இடம்பெற்றிருக்கும் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பள்ளி சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்போது ஒருவர் மற்றொருவரை கோபப்படுத்த கெட்ட வார்த்தைகளுக்கு பதிலாக, அம்மா பெயரையோ அல்லது சகோதரியின் பெயரையோ பயன்படுத்துவார்கள் என்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் பெயரை குறிப்பிடுவது ஆப்கானிஸ்தானில் அந்த அளவிற்கு அவமானமாக கருதப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்சன் ராய்டர்ஸ் ஃபௌண்டேஷனை சேர்ந்த பத்திரிகையாளர் விடா சக்ஹாரி பொதுவெளியில் பெண்களின் பெயர்களை பயன்படுத்த முடியாததால் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். விவாகரத்து பெற்ற விடா சக்ஹாரி, ஆண் துணை இல்லாமல் தனது குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியாமல் அவதிப்பட்டதை அதில் குறிப்பிடுகிறார். இதனால் குழந்தை பள்ளியில் சேர்ப்பது ஓராண்டு தள்ளிப்போனதாகவும் அவர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்களில் ஆண்கள் துணை இல்லாமல் பெண்களால் எந்த காரியத்தையும் செய்ய முடியாது. தந்தை இல்லாமல் தனது குந்தைக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியாததால்தான் விடா சக்ஹாரியால் தனது குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியவில்லை.

பெண்களின் பெயரை பொதுவெளியில் பயன்படுத்தும் உரிமையை கோரி #WhereIsMyName ( எங்கே என் பெயர்) என்ற ஹாஷ் டேக்கில் ஆப்கான் பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக எழுப்பி வந்த கேள்விக்கு ஆப்கான் அரசு தற்போது செவி சாய்த்துள்ளது.

செவ்வாய்கிழமையன்று கூடிய ஆப்கானிஸ்தான் அமைச்சரவையின் சட்டத்துறை கமிட்டியில், தேசிய அடையாள அட்டையில் தாயின் பெயரை சேர்க்கும் சட்டத்திருத்தத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் அதிபரின் கையெழுத்திற்குப் பிறகு இந்த சட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

ஒருபுறம் ஆப்கான் அரசு தாலிபான்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று துணை அதிபரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்