Aran Sei

‘பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட தலித் எழுத்தாளர்களின் படைப்புகள்’ – டெல்லி பல்கலை.க்கு தமுஎசக கண்டனம்

டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகள் நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமுஎகச வின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்துத்துவாவினர் பாரதிய ஜனதா கட்சியிடமுள்ள ஒன்றிய அரசதிகாரத்தைப் பயன்படுத்தி தமது கருத்தியலுக்கு இணங்காத வரலாறு அறிவியல் சமூகவியல், கலை இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவருகின்றனர். நீக்கப்படும் அந்தப் பாடங்களுக்குப் பதிலாக இந்துத்துவக் கருத்தியலுக்கு இசைவாக வரலாற்றைத் திரித்து எழுதிய பொய்களையும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களையும், கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை நியாயப்படுத்தும் விதமாக இலக்கியப் பெறுமதியற்று எழுதப்பட்ட குப்பைகளையும் பாடங்களாக திணித்துவருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப்புலத்தின் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகங்களும் பாடத்திட்டக் குழுக்களும் தமது பொறுப்பிலிருந்து பிறழ்ந்து ஆளும் கட்சியின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் இழிநிலைக்குத் தாழ்ந்துவிடக்கூடாதென தமுஎகச வலியுறுத்துவதாக கூறிய அவர்கள், இந்துத்துவாவினரது அரசதிகார அழுத்தத்திற்குப் பணிந்து எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென்னும் டில்லி பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க முடியாது என்றும் நீக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ள அப்பாடங்கள் பாடத்திட்டத்தில் தொடரவேண்டும் என்கிற முழக்கம் வலுப்பெற ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள யாவரும் குரலெழுப்ப வேண்டுமென தமுஎகச கேட்டுக்கொள்வதாக தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்