Aran Sei

“நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலின் முடிவைப் பெண்கள்தான் தீர்மானிப்பார்கள் – கனிமொழி

நடக்கவிருக்கின்ற சட்டசபைத் தேர்தலின் முடிவைப் பெண்கள்தான் தீர்மானிப்பார்கள் எனத் திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தி இந்து-விற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

“இந்த அரசாங்கம், தமிழ்நாட்டின் பெண்களைக் கைவிட்டுவிட்டது. குறிப்பாக சுய உதவிக் குழுக்களின் பங்காக இருக்கும் பெண்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. திமுக அரசு சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இந்த அரசு கொடுக்காததால் பல சுய உதவிக் குழுக்கள் சரிந்துவிட்டன. குழுக்களின் உறுப்பினர்களாக இருக்கும் அரசியல் அறிவுள்ள பெண்கள், திமுகவிற்குதான் வாக்களிப்பார்கள்” என்றார் கனிமொழி.

அதிமுக அரசு சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களை வலிமையாக்காமல் அவர்களை வட்டிக்குக் காசு வாங்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. சட்டத்தை நிலைநாட்டாமல், பெண்களைப் பாதுகாக்கவும் தவறியிருக்கிறது. “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. தண்டனை விகிதமோ குறைவாக இருக்கிறது. இந்த அரசின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்கு ஒரு உதாரணம்தான் பொள்ளாச்சியில் நடந்தது”.

இதன் விளைவாக, திமுக நிறைய பெண் வேட்பாளர்களை முன்னிறுத்துவது குறித்து யோசிக்கலாம் என்றார். “ நிச்சயமாக, பெண்கள் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் இதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், மத்திய அரசை அமைத்திருக்கும் பாஜக அதைச் செய்யவில்லை. பாஜக அதன் தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதாகச் சொல்லியிருந்தது, சில கட்சிகளுக்கும் இதற்கு ஆதரவளிக்கின்றன என்றாலும் பாஜக அதைச் செய்வதாக இல்லை”

அதிமுக அரசாட்சி எதிர்க்கப்படுவதற்கு வேலையில்லா நிலை போல பல பிரச்சினைகள் இருக்கின்றன. “மக்களோடு நான் கலந்துரையாடும் போது, அவர்களுக்குள் அரசின் மீது அதிருப்தி இருப்பதைப் பார்க்கிறேன். எரிவாயு மற்றும் எண்ணெய்க் குழாய்களினால் விவசாயிகள் துவண்டு போய் இருக்கிறார்கள். நெசவாளிகளும் வேதனையோடு இருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு தமிழகத்தில் எல்லோருக்குமே அரசோடு பிரச்சினை இருக்கிறது. ஆனால் திட்டங்களை எதிர்ப்பவர்களிடம் பேசக் கூட அரசு தயாராக இல்லை” . பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யின் தாக்கத்தில் இருந்து இன்னமும் வெளிவராத தொழில் நிறுவனங்கள் மாநில அரசு மீதும், மத்திய அரசு மீதும் அதிருப்தியோடு இருக்கின்றனர்.

அதிமுக அரசு கொண்டு வந்த ஒப்பந்த முறை விவசாயச் சட்டத்தை திமுக ரத்து செய்யுமா எனக் கேட்டதற்கு, திமுக அந்தச் சட்டத்தைக் குறித்து ஆய்வு செய்யும், அது விவசாயிகளுக்கு எதிராக இருப்பது தெரிந்தால், தலைமை தக்க நடவடிக்கை எடுக்கும் என்றார். “மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களையும் திமுக எதிர்க்கிறது. அவை விவசாயிகளுக்கு எதிராக இருக்கின்றன, மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கின்றன. ஏனென்றால், விவசாயம் மாநில அரசு பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயம்” என்றார்.

ரஜினிகாந்தின் வருகை!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்துக் கேட்ட போது, அதைப் பற்றி திமுக கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்றார். “ திமுக அதைப் பற்றி எல்லாம் வருந்துவது இல்லை. அவர் 2021 ஜனவரியில் தான் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான் கருத்து சொன்னால்தான் நியாயமாக இருக்கும். ஆனால் அது திமுகவின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது, மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்”

மு.க.அழகிரி 2021 சட்டசபை தேர்தலில் முக்கியப் பங்காற்றுவேன் எனத் தெரிவித்தது குறித்துக் கேட்ட போது, ஒரு தனிநபராக அவருக்குக் கட்சி தொடங்கவோ, தேர்தலில் போட்டியிடவோ அத்தனை உரிமைகளும் இருக்கின்றன. அவர் திமுகவில் மீண்டும் இணைவாரா என்பது குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.

2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து ஒரு மாநில அமைச்சர் பேசியிருப்பது தேர்தலில் திமுகவிற்குப் பாதிப்பை உண்டாக்குமா எனக் கேட்டதற்கு, “ எனக்கெதிராக இருந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் ஊகங்கள்தான். அது ஒரு பிரச்சினையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. அதிமுக அமைச்சர்கள் பதற்றத்தில் இருப்பதால் பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள். இப்படி முயற்சி செய்பவர்களுக்கு எதிராகத்தான் குட்கா ஊழல் போன்ற வழக்குகள் இருக்கின்றன” என்றார்.

இந்த அரசின் ஆட்சியில்தான் தலைமை செயலகத்தில் ரெய்டு நடந்தது, என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்