Aran Sei

`பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொள்வார்’ – முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

Image Credits: Mathrubhumi

சுயமரியாதை உள்ள ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்குப் பதிலாகத் தற்கொலை செய்துகொள்வார் என்று காங்கிரசின் கேரளா மாநிலத் தலைவர் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான இந்தக் கருத்து பலராலும் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று scroll.in செய்தி தெரிவிக்கிறது.

திருவனந்தபுரத்தில், இடது ஜனநாயக முன்னணி அரசைக் கண்டிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் பகிரங்கமாகக் கூறும் ஒரு பெண்ணை யாரும் நம்ப முடியாது,” என்று கூறியுள்ளார். “சுய மரியாதையுடைய ஒரு பெண் ஒரு முறை கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் தற்கொலை செய்து கொள்வார்,” எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதீஷ் என்பவர் ட்வீட் செய்திருக்கிறார்.

2013-ம் ஆண்டு, கேரளத்தின் சூரிய ஒளி மின்சார ஊழலில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர் போன்ற பெண்களை பயன்படுத்தி, முதலமைச்சர் பினராயி விஜயன், “மிரட்டல் அரசியலை” மேற்கொள்வதாக ராமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சரிதா நாயர் 2013-ல் குற்றம் சாட்டியிருந்தார்.

மாநில அரசு சரிதா நாயரை ஒரு பகடைக் காய் போல் பயன்படுத்துகின்றது என அவர் இதன் மூலம் தெரிவித்துள்ளார்.

“இதுகுறித் தரவுகளை எப்போது வெளியிடுவது என்று சரிதா அவ்வப்போது கேட்டு வருகிறார். முதல்வரே, உங்கள் விளையாட்டு இங்கே பலிக்காது. இந்த அச்சுறுத்தல் அரசியல் இங்குச் செல்லுபடி ஆகாது. கேரளத்து மக்கள் அதைப் புரிந்துகொள்வார்கள்,” என்று ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

“ஒரு பாலியல் தொழிலாளியைக் கொண்டு வந்து, அவரை வைத்து பொய்க் கதைகளை உருவாக்க முடியும் என நினைத்தால் விஜயன் மூழ்கி இறந்து போக வேண்டியதுதான்,” என்று ராமச்சந்திரன் பேசினார்.

“இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டு கேரள மக்களுக்கு அலுத்துவிட்டது… ஒரு பெண் ஒரு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சொன்னால் எங்களால் புரிந்து கொள்ள முடியும். அந்நிலையில் சுய மரியாதை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்து விடுவாள் அல்லது மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தவிர்ப்பாள். ஆனால், இவர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாநிலம் முழுவதும் கூறிவருகிறார்,” என்று ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

2013-ம் ஆண்டில், சரிதா நாயரும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும், சூரிய மின்சக்தி தகடுகளை அவர்கள் சார்பாக நிறுவுவதாகவும், சூரிய மின்சக்தி நிறுவனங்களில் பங்குகளை பெற்றுத் தருவதாகவும்,  முதலீட்டாளர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டனர். பணத்தை வாங்கிய பின் அவர்கள் தலைமறைவு ஆகி விடுவார்கள். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் பிற காங்கிரஸ் அமைச்சர்களும் பணத்தையும் பாலியல் உதவிகளையும் பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்குத் துணை நின்றதாகக் குற்றம் சட்டப்பட்டனர்.

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த போது இந்த ஊழல் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இருந்தது. 2017-ம் ஆண்டில், இந்த ஊழலை விசாரித்த ஒரு நீதி ஆணையம், வாடிக்கையாளர்களை ஏமாற்ற உம்மன் சாண்டியும் அவரது நான்கு ஊழியர்களும் சரிதா நாயர் மற்றும் அவரது நிறுவனத்திற்கு உதவி செய்ததாகக் கூறி ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை “பாரபட்சமானது” என்று உம்மன் சாண்டி குற்றம் சாட்டினார்.

சரிதா நாயர் குறித்து ராமச்சந்திரனின் கருத்துக்குக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமச்சந்திரனின் கருத்துக்கள் பெண்களைப் பற்றிய அவரது மனநிலையையும் கருத்தையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஜூன் மாதம், அமைச்சர் ஷைலஜாவின் சுகாதாரத் துறை பணியை கேலி செய்த ராமச்சந்திரனின், ஷைலஜா “கோவிட் ராணி” மற்றும் “நிஃபா ராஜ்குமாரி” எனும் பட்டங்களை வாங்க போராடுவதாகக் கூறினார்.

மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் ஷைலாஜா, முக்கியமான அரசியல் பொறுப்பில் இருகும் ராமச்சந்திரனின்  இந்தக் கருத்துக்கள் ‘அபாயமானவையாகவும் பொறுப்பற்றவையாகவும்’ உள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான வாசுகி உமாநாத், “ராமச்சந்திரன் தனி குற்றவியல் சட்டம் ஒன்றை முன் வைக்கிறார். இது கடைந்தெடுத்த ஆணாதிக்க அரசியல்… வல்லுறவு செய்யப்படும் பெண்தான் அவமானப்பட வேண்டும் என்கிற பிற்போக்கு கண்ணோட்டம்,” என்று இதனை விமர்சித்துள்ளார்.

“இது வல்லுறவைக் குற்றமெனக் கருதாமல், கற்பு அழிக்கப்படுகிறது என்று ஓலமிடும் பெண்ணடிமை பெருங்கோட்டை கருத்தியல். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடுவது அல்லவா சுய மரியாதை? காங்கிரஸ் கட்சி இதனை தட்டிக் கேட்குமா? தவறு என்று சொல்ல முன் வருமா?” என்றும் வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ள ராமச்சந்திரன், “இந்தக் கருத்துக்கள் குறிப்பாக யாரையும் குறிவைப்பதாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால், நான் எனது வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

“இந்தக் கருத்துக்கள் சில விதங்களில் பெண்களுக்கு எதிரானது என்று தவறாகச் சித்தரிக்கப்பட்டால், அது சரியல்ல. இந்த [இடது ஜனநாயக முன்னணி] அரசாங்கம் எந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நிரூபிக்க மட்டுமே நான் இதை கூறினேன்,” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்