மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை விடுவிக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பாஜக தொண்டர்: கருப்பு மை ஊற்றி சேலை கட்டி விட்ட சிவசேனா தொண்டர்கள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்ற 2019 நவம்பர் மாதம் சேலத்தில் நடைபெற்ற இயற்கை எய்திய மணிவாசகத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் (எ) கோ.சீ, அனுப்பூர் செல்வராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்து UAPA எனும் கொடூரச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இறப்பு, இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், அங்குச் சென்று கோஷம் இடுவதும் குற்றம் என்றும், அப்படிச் செய்வோரை உபா எனும் சட்டத்தில் சிறையில் அடைப்போம் என்பதும் சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம் என்று கூறிய அவர், காவல்துறையை தங்களது ஏவல்துறையாகப் பயன்படுத்துவது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல என்றும் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
மகனின் உடலைக் கேட்டு போராடிய தந்தை மீது வழக்கு – தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
”இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதற்கு IPC 188, 120பி, 121, 121ஏ, UAPA சட்டப் பிரிவுகள் 10, 13, 15 மற்றும் 18 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது தமிழ் இன ஆர்வலர்களைக் கண்டு இந்த ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள் என்பதையே இது பிரதிபலிக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜக எதிர்ப்புச் சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களைத் தடுக்கும், ஒடுக்கும் தமிழக அரசின் செயலாகவே இது அமைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், இதே இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு முழக்கமிட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் சதீஷ், அருண்சேரி ஆகியோருக்கு தீவட்டிப்பட்டி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி – வைகோ கண்டனம்
தமிழக முதல்வர் உடனடியாகச் செயல்பட்டு இந்த 5 பேர்மீதும் பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விரைந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.