ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகும் இதற்கு ஒரு தீர்வு எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களைப் பின்வாங்கப்போவதில்லை என ஒன்றிய அரசு திட்டவட்டமாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதோடு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி) உறுதிபடுத்த புதிய சட்டம் இயற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தால் நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக நொய்டாவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?
இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எதற்காக போராட்டம் நடைபெறுகிறது? விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர அனுமதிக்கலாமா என முடிவு செய்ய இருப்பதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளது. இதே எஸ்.கே.கவுல் அமர்வு ஹாகின் பாக் போராட்டத்தையும் கடுமையாக விமர்சித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து தற்போது கடுமையான சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. நீதிமன்றம் தன்னுடைய அதிகார வரம்புகளை மீறி உத்தரவுகளை வழங்குவதாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்
இதனைக் கடந்த சில வருடகால உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையை வைத்து மதிப்பிட வேண்டிய தேவை உள்ளது.
முதலில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த தற்காலிக தடைவிதித்த உச்சநீதிமன்றம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்குத் தீர்வு காண மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்திருந்தது. ஆனால் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள், ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் என்பதால் விவசாயிகள் அந்தக் குழுவின் முன்பு ஆஜராக மறுத்துவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை விசாரித்து முடிக்க வேண்டும் எனத் தெளிவான வரையறை எதுவுமில்லை. அது முழுக்க நீதிபதிகள் குறிப்பாக தலைமை நீதிபதியின் ஆளுகைக்கு உட்பட்டது. அதே சமயம் அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான நடைமுறை.
ஆனால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகள், சிஏஏவுக்கு எதிரான வழக்குகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்கிய சட்டத்திற்கு எதிரான வழக்குகள் எனப் பல அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தற்போது வரை விசாரிக்காமலே காத்திருப்பில் வைத்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பிறகு சிறைவைக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல்வாதிகள், பல மூத்த தலைவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளையும் உச்சநீதிமன்றம் மிகவும் தாமதமாகவே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு மனுக்கள் தற்போது வரை தீர்க்கப்படாமலே உள்ளன.
உச்சநீதிமன்றத்தின் சமீபகால செயல்பாடுகள் இவ்வாறு இருக்க விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து நகை முரணாக உள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாமலே ஆளுநரை மாநில அரசாக கருதி அவரின் ஒப்புதலைப் பெற்று சிறப்பு அந்தஸ்து கொண்டிருந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது ஒன்றிய அரசு. இதில் பல குளறுபடிகளை, ஆபத்துகளை ஓய்வு பெற்ற பல முன்னாள் நீதிபதிகளே சுட்டிக் காட்டியுள்ளனர். தற்போது காஷ்மீரில் சட்டமன்றத் தொகுதிகள் மறு வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த வழக்கில் ஒரு தீர்வு எட்டப்படவில்லை.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு (EWS) வழங்கப் புதிய சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் 10% EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தத் தொடங்கின. இதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு பணிகளில் 10% EWS இடஒதுக்கீடு தடை இல்லாமல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு. உச்சநீதிமன்றம் தன்னிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதே அதன் முக்கியமான கடமை.
கட்டுரையாளர் – மோகன், ஊடகவியலாளர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.