Aran Sei

`நீதித்துறையைக் களங்கப்படுத்த பத்திரிகையாளர் சந்திப்பா?’ – ஜெகன் மோகனைச் சாடும் வழக்கறிஞர்கள்

நன்றி : தி ஸ்க்ரால்

ஜகன்மோகன் ரெட்டி இனி நீதித்துறைக்கு எதிராகப் பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதற்கும் நீதித்துறையைக் களங்கப்படுத்த பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுனில் குமார் சிங் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆவார். ஆந்திர அரசுக்கு நிலம் அளிப்பது, சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவது, புதிதாகத் தொடங்கப்படுகின்ற நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது ஆகியவற்றில் ரூ.1172 கோடிகளுக்கு மேல் இவர் ஊழல் செய்ததாக 2013 ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத்தின் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். இதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 16 மாதங்களுக்குப் பிறகு அவருக்குப் பிணையளித்ததாக நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த நீதிமன்றங்களுக்குத் தலைமைப் பொறுப்புவகிப்பவர் நீதிபதி என்.வி.ரமணா. ஜெகன் மீது பதியப்பட்ட வழக்கை அந்தச் சிறப்பு நீதிமன்றங்களுள் ஒன்றுதான் விசாரித்துவருகிறது.

கடந்த செப்டம்பர் 16-ம் தேதி `சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உத்தரவிட்டார் என்.வி.ரமணா. அதன்படி சில கால இடைவெளிக்குப் பிறகு கடந்த அக்டோபர் 9-ம் தேதி ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தி ஸ்கரால் செய்தி வெளியிட்டுள்ளது.

அதையடுத்து ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான என்.வி.ரமணா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு எட்டுப் பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் .

அந்தக் கடிதத்தில், “ஆந்திர உயர் நீதிமன்றத்தின் சில நீதிபதிகள், எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணாவின் தலையீடு இருக்கிறது. நீதிபதி என்.வி.ரமணாவுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ”மே 2019-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து சந்திரபாபு நாயுடு அரசாங்கம், ஜூன் 2014 முதல் மே 2019 வரை மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன் பிறகுதான் ஆந்திர மாநில நீதித்துறை விவகாரங்களில் நீதிபதி ரமணா தலையிடத் தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடைய சில முக்கிய விவகாரங்கள், குறிப்பிட்ட சில உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன’ என்று பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜெகன்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இவ்வளவு குற்றச்சாட்டுகளை முன் வைப்பது இதுவே முதல்முறை என நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாக மூவர் ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ”தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக, தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் ஒருவர் முதலமைச்சர் பொறுப்பை வகிக்க அனுமதிக்கக் கூடாது” என்று தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று மற்றொரு மனுவை இந்தியாவின் ஊழல் தடுப்பு கவுன்சில் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த பிரதீப் குமார் யாதவ் தாக்கல் செய்துள்ளார்.

மூன்றாவது மனுவை வழக்கறிஞர் சுனில் குமார் சிங் தாக்கல் செய்துள்ளார். ”அவர்  ஜகன்மோகன் ரெட்டி இனி நீதித்துறைக்கு எதிராகப் பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதற்கும் நீதித்துறையைக் களங்கப்படுத்த பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

“நீதித்துறைக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க சரியான இடம் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் தானே தவிர பத்திரிகையாளர் சந்திப்புகள் அல்ல” என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் யு.யு.லலித் தலைமையிலான (நீதிபதிகள் வினித் சரண், ரவீந்திர பாட்) அமர்வு இந்த வழக்கை விசாரித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி யு.யு.லலித் அறிவித்துள்ளார்.

”நான் வழக்கறிஞராக இருந்தபொழுது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிக்காரர்களின் சார்பாக வாதாடியுள்ளதால். இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும்” என்று நீதிபதி யு.யு.லலித் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் என லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற. எஸ்.ஏ.பாப்டே அடுத்த ஆண்டு மத்தியில் ஓய்வு பெறவிருக்கிறார். அவரின் ஓய்வுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா வருவார் என நேஷனல் ஹெரால்ட் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்