Aran Sei

`என்ஆர்சி புதுப்பிப்புப் பணி மேற்கொள்ளப்படும்’ – அசாம் நிதி அமைச்சர்

2021-ம் ஆண்டு மாநில தேர்தல் முடிவடைந்த பிறகு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால், தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்க அசாம் அரசு புதிய நடைமுறைகளை மேற்கொள்ளும் என்று அம்மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். சந்திப்பின்போது 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட முழுமையான என்ஆர்சி வரைவில் உள்ள பெயர்களை 10-20% மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று அவர் அமித் ஷாவிடம் கோரியுள்ளார். இதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என ‘தி இந்து’ இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீக் ஹஜெலா, அசாம் மாநில என்ஆர்சி பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அப்போது, என்ஆர்சி பதிப்பை அவர் திரித்ததாகக் கூறப்பட்டது. ஆகையால், அசாமில் பாஜக கூட்டணி தலைமையிலான அரசாங்கம் அந்தப் பதிப்பை நிராகரித்தது.

என்ஆர்சியில் பதிவு செய்துகொள்வதற்காக 3.3 கோடி பேர் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தனர். அதில், 19 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை வழங்காததாகக் கூறி அவர்களின் பெயர்கள் பதிவேட்டில் இணைக்கப்படவில்லை.

போடோலாண்ட் பிராந்திய கவுன்சிலின் உடல்கூரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ஹிமாந்தா பிஸ்வா கலந்துகொண்டுள்ளார். அப்போது, “சந்தேகத்திற்குரிய குடியுரிமை உள்ளவர்களைக் களையெடுப்பதற்காக என்ஆர்சி பணிகளைப் புதிதாகத் தொடங்குவதில் பாஜக உறுதியாக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

வியாழன் அன்று, ஊடகவியலாளர்களிடம் பேசிய ஹிமாந்தா பிஸ்வா “வாய்ப்பு வழங்கப்பட்டால், ‘அடிப்படையில் தவறான’ என்ஆர்சியை இன்னும் ஐந்து ஆண்டுகளில் திருத்துவது, ‘நவீன முகலாயர்களை’ தோற்கடிக்கப் போதுமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அசாம் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவுக்கு எதிராகக் களமிறங்க உள்ளது. இந்தக் கூட்டணியைக் குறிவைத்து ‘நவீன முகலாயர்கள்’ எனும் சொல்லை பாஜக பயன்படுத்துகிறது.

“என்ஆர்சி பணியைக் கண்காணித்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தால், பிழை இல்லாத பட்டியலுக்கான புதிய நடைமுறைகளை நாங்கள் மேற்கொள்வோம். என்ஆர்சியில் உள்ள பெயர்களை மீண்டும் சரிபார்க்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை நாங்கள் ஏற்கனவே கோரியுள்ளோம்” என்றும் ஹிமாந்தா பிஸ்வா கூறியுள்ளார்.

அசாம் அரசு, 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பங்களாதேஷின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் 20% பெயர்களையும் மற்ற மாவட்டங்களில் 10% பெயர்களையும் மீண்டும் சரிபார்க்க, உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. முழுமையான வரைவை வெளியிடுவதற்கு முன்னரே 27% பெயர்கள் சரிபார்க்கப்பட்டதாகப் பிரதீக் ஹஜெலா கூறியதால் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்கவில்லை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்