Aran Sei

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்ததற்கு ஏன் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கூடாது – ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Image Credits: Wikipedia

மிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்ததற்கு ஏன் ரூ. 5,600 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடக் கூடாது என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 41லிருந்து 39 ஆக குறைக்கப்பட்டது தொடர்பாக நீதிபதிகள் என். கிருபாகரன் (ஓய்வு பெறும் முன்), பி. புகழேந்தி ஆகியோர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

”ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைப்பது ‘நியாயமற்றது’. இது மக்கள்தொகையை கட்டுப்படுத்து நடவடிக்கைகளை வெற்றிகரமான மேற்கொண்டது, அவர்களை தண்டிப்பதற்கு ஒப்பாகும்” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தனித் தொகுதியான தென்காசி நாடாளுமன்ற தொகுதியைப் பொதுத் தொகுதியாக மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீராகரித்த நீதிபதிகள், சுழற்சி அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்கும் சட்டம் இல்லாததால் இந்த உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும், இருப்பினும் நாடாளுமன்ற தொகுதிகளை சுழற்சி அடிப்படையில் ஒதுக்கும் சட்ட திருத்ததை பரிந்துரைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை எதிர் மனுதாரராக சேர்த்திருக்கும் நீதிமன்றம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மீண்டும் 41 ஆக அதிகரிக்கவோ அல்லது எதிர்கால மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது இருக்கும் 39 தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ள கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.

பொதுநலனுக்காக கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாட்டில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் முக்கியமானவர் என கூறிய நீதிபதிகள், 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்க்கப்பட்டதை சுட்டிக்காட்டினர்.

1967 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடைபெற்ற பொது தேர்தல்களின் அடிப்படையில் இதுவரை தமிழ்நாடு மொத்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது என கூறிய நீதிபதி கிருபாகரன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 200 கோடி இழப்பு என நிர்ணயிக்கும் பட்சத்தில், மொத்தம் ரூ. 5,600 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகையை பொருட்படுத்தாமல் தற்போது இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகள் குறையாமல் இருக்க அரசியலமைப்பின் 81வது பிரிவில் திருத்த கொண்டுவர வேண்டும் என கூறிய நீதிபதிகள் இது தொடர்பாக ஒன்றிய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Source : The Hindu

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்