Aran Sei

‘பஞ்சாபின் நிலமற்ற தலித்துகள், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்’ – காரணம் என்ன?

2020 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்த நோய்த்தொற்று காலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குளிரிலும் பணியிலும் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடங்கினர். பின் நாளடைவில் நாட்டின் பல்வேறு நிலபரப்பிலிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கரம் நீண்டது. ஒருபக்கம் போராட்டக்காரர்களின் உறுதி வலுப்பெற்றுக்கொண்டே இருந்தாலும், இன்னொருபக்கம் இந்த விஷயத்தில் அரசின் அலட்சியம் தீர்ந்தபாடில்லை.

விவசாயிகள் போராட்டம்: தனிச்சிறப்பானதாக்கும் நான்கு காரணிகள்

இந்நிலையில் களத்திலிருக்கும் விவசாயிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், பஞ்சாப்பின் தப்வாலியிலிருந்து டெல்லி – ஹரியானா எல்லைக்கு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினம் (ஜனவரி 7) புறப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் கெத் மஜ்தூர் யூனியனின் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர், பஞ்சாப் மாநிலத்தில் தங்களின் நில உரிமைக்காக போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றதற்கு முக்கிய காரணம், இவர்கள் தலைமையின் பின்புலம்தான் எனக் கணிக்கப்படுகிறது. இவர்கள் தலைமை, தலித் சமூகத்தை சேர்ந்த மக்களால் நிரம்பியது. அனைவருமே, நில உரிமைக்காக போராடியவர்கள்.

கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

இவர்களின் மாநிலமான பஞ்சாப்பில், தலித் சமூகத்தை தவிர, பிற எல்லா சமூகத்தை சேர்ந்தவர்களும், நில உரிமையாளர்களாக இருப்பதுண்டு. உதாரணத்துக்கு அந்நிலத்தில் 25 விழுக்காடு வாழும் ஜாட் சமூக மக்கள், பெரும்பான்மை விவசாய நிலத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அங்கு வாழும் 32 விழுக்காடு  தலித் மக்களுக்கோ, வெறும் 2.3 விழுக்காடு விவசாய நிலம் மட்டுமே இருக்கிறது. இந்தப் பெரும்பான்மை நில உரிமையாளர்கள், (ஜாட் சமூகத்தினர்) விவசாய சட்டங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர் என்பது கூடுதல் தகவல். இதற்கு முன்பே, நிலம் தொடர்பான பிரச்னையில் பல நேரத்தில் இந்த ஜாட் சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்கும் பிரச்னைகள் வந்து, அப்பகுதியில் போராட்டங்கள் பல நடந்திருப்பதால், இதையும் அப்படியொரு `ஜாட் பிரச்னை’ என்றே அப்பகுதியின் அதிகாரவர்க்கம் நினைத்துக்கொண்டுள்ளது. ஆனால் இது அதையும் தாண்டி, ஆழமானது. காரணம், முந்தைய சிக்கல்போல இப்போது நிலங்கள் பாதிக்கப்படுவது தலித் மக்களுக்கு மட்டுமல்ல, பிற சமூகத்தினருக்கும்தான்! அதை புரிந்துக்கொள்ளும்வரை, இது ஒருசார்பினரின் பிரச்னையாகவே பார்க்கப்படும்.

பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?

இங்கே நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், இப்பகுதியின் அதிகப்படியான நிலத்துக்குச் சொந்தக்காரர்கள், இந்த சட்டத்தை ஆதரிக்கின்றனர் – குறுகிய நிலப்பரப்பு கொண்டவர்கள், எதிர்க்கின்றனர்! இந்த முரண் குறித்து, போராட்டத்தில் இணைந்திருக்கும் மக்கள் ஒரு ஆங்கில தளத்துக்கு அளித்த பேட்டியில், “எங்களில் சிலர், சொந்த நிலமே இல்லாதவர்கள். ஆனால் இந்த சட்டம், எங்களைப் போன்ற தொழிலாளர்களையும் – விவசாயிகளையும் – கூடவே நிலத்தின் உரிமையாளர்களையும் எந்தளவுக்கு பாதிக்கும் என்பது எங்களுக்கு கண்கூடாக தெரிகிறது. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். இதற்கு முன்பு எங்களுக்கு அவர்களோடு இருந்த பகைமைதான், இப்போதும் அவர்களை எதிர்க்க வைக்கிறது என சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்களோடு, கடந்த வருடங்களில் எங்களுக்கு பல்வேறு கருத்து முரண்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அவையாவும் முழுக்க முழுக்க உரிமை சார்ந்து மட்டுமே இருந்திருக்கிறது. அந்த உரிமை குணமே, எங்களை இன்று அவர்களுக்கும் சேர்த்து போராட வைக்கிறது” எனக் கூறியிருக்கின்றனர்.

இந்த ஒற்றுமை, பஞ்சாப்பிலிருந்து புறப்பட்ட இந்த தலித் மக்களுக்கு மட்டுமல்ல. இத்தனை நாள்களாக களத்தில் நிற்பவர்களுக்கு இருக்கிறது. களத்திலிருக்கும் மஷாபி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த நபரொருவர், தன்னுடைய ஒரு பேட்டியில், “இப்போராட்டம், முழுக்க முழுக்க உரிமைக்கானது. அதனால்தான் இது நம் அனைவருக்குமான போராட்டமாக இருக்கிறது. விவசாயம் செய்பவர் எந்த சமூகமாய் இருந்தாலும், அவரை சார்ந்துதான் பிற சமூகத்தினர் இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, இதை ஒரு சமூகத்தின் பிரச்னையாக பார்க்காமல், அனைவருக்குமானதாக பார்க்கவேண்டும். எங்களின் எதிர்ப்புக் குரல், எங்கள் சமூகத்தின் குரலாய் இருந்து விட கூடாது. இது நமக்கான குரல், நம் அனைவருக்குமான குரல். நாங்கள் பாதிக்கப்படுவோரின் பிரதிநிதிகளே தவிர, குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல. இந்த மத்திய அரசு, எங்களை சாதிய வட்டத்துக்குள் அடைத்து போராட்டத்தின் போக்கை மாற்ற நினைக்கிறது. ஆனால் மக்கள் உண்மையை உணர்வது அவசியம்” என்கிறார்.

இந்த விழிப்புணர்வை இன்னும் அதிகமாக்க, சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் மாணவர் சங்கம் (ஏ.எஸ்.ஏ), போராட்டம் நடைபெறும் டெல்லியின் எல்லையில், இலவச நூலகம் ஒன்றை அமைத்துள்ளது. இதன் உறுப்பினரும் பஞ்சாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருமான குர்தீப் சிங் தி, இது குறித்து அளித்த பேட்டியொன்றில்,

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

“இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள நீங்கள் நில உரிமையாளராகவோ அல்லது நிலமற்றவராகவோ இருக்க வேண்டியதில்லை. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நாங்கள் அனைவரும், ஒரு குறிப்பிட்ட சாதியின் உறுப்பினர்களாக மட்டுமல்லாமல், பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாகவும், இப்பொதுச் சமூகத்தின் உறுப்பினர்களாகவுமே இப்போராட்டத்தில் பங்கேற்க இங்கு வந்தோம். எங்களைப் போன்ற போராட்டாக்காரர்கள் செய்வது ஒன்றுதான். அது, `மக்களுக்கு கல்வி கற்பித்தல், கிளர்ச்சி செய்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்’ என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுதல்.

அந்தக் கனவை நிறைவேற்ற, எங்களால் முடிந்த ஒரு சிறு பங்காக வெவ்வேறு சாதிகள் மற்றும் வகுப்புகளைச் சேர்ந்தவர்களை ஈர்க்கும் ஒரு நூலகத்தை இங்கு நிறுவியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

கற்பிப்போம், ஒன்று சேர்வோம், போராடுவோம்!

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்