Aran Sei

பிஎம் கேர்ஸ் நிதி அரசு நிதி இல்லை என்றால் அரசு பணத்தில் விளம்பரம் ஏன்? – ஒன்றிய அரசுக்கு எதிர்கட்சிகள் கேள்வி

பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பெறப்பட்டிருக்கும் நிதி ஒன்றிய அரசின் நிதி இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், அரசு நிதியில்லை என்றால்  அரசு பணத்தில் விளம்பரப்படுத்தியது ஏன்? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மார்ச் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு நிதியளிக்க வேண்டும் என்ற விளம்பரங்கள்  ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் இணையதளங்களில் இடம்பெற்றிருந்தன.

ஒன்றிய அரசு ஊழியர்கள் அவர்களின் ஒருநாள் ஊதியத்தை பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

அனைத்து அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அமைச்சரவை செயலாளர் ஏப்ரல் 16, 2020 ஆம் தேதி எழுதியிருந்த கடிதத்தில், ”ஊழியர்கள் அனைவரும் அவர்களின் ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பிற்கு அளிக்க வேண்டும். ஊழியர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை பிஎம் கேர்ஸ் நிதியில் சேர்க்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்று ஏப்ரல் 22, 2020 ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்ட ஐஏஎஸ் சங்கம், ஐஏஎஸ் அதிகாரிகளும் நிதியளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிஎம் கேர்ஸ் நிதி அரசு நிதியைப் பொது நிதியாக அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பதிலளித்த ஒன்றிய அரசு, பிஎம் கேர்ஸ் நிதிக்கும் அரசின் நிதிக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தது.

ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை மாதம்தோறும் ஒரு நாள் ஊதியத்தை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் வழங்க வேண்டும் என்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “பிஎம் கேர்ஸ் அரசு நிதி இல்லை என்றால் எவ்வாறு இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என கேள்வி எழுப்பியிருந்தார்.

”இந்த வெளிப்படைய்யான கொள்ளை தடுக்கப்பட்டு, நிதிகள் தணிக்கை செய்யப்பட்டு, உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை காங்கிரஸ் கொறடாவுமான ஜெய்ராம் ரமேஷ், “பிஎம் கேர்ஸ் நிதி என்பது பிரதமரால், பிரதமருக்காக பிரதமர் நிர்வகிக்கும் நிதியாக உள்ளது. பிரதமரின் பெயரில் நிர்வகிக்கும் நிதி அரசு நிதி இல்லையா?. என்ன ஒரு நகைச்சுவை, மக்களை அவமதிக்கும் செயல்” என பதிவிட்டுள்ளார்.

”இந்திய அரசின் கருத்தின்படி நிதி வெளிப்படைத்தன்மையுடன் கையாளப்படுகிறது என்றால், தலைமை தணிக்கை கணக்காளரின் கீழ் தணிக்கைக்கு ஏன் உட்படுத்த முடியாது என புரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

”நிதி எங்கிருந்து வருகிறது, எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தெளிவற்றதாகவே உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிஎம் கேர்ஸ் குறித்து பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது பிரதமரின் தனிப்பட்ட நிதியோ, தனிநபர் நிதியோ, ஒரு கட்சியின் தனிப்பட்ட நிதியோ அல்ல. அனைத்து பங்களிப்பார்களின் பெயர்கள் மற்றும் இதுவரை நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் மட்டுமே, அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை என்ற கூற்று உண்மையாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்