Aran Sei

நீதிமன்றம் பிணை வழங்கினாலும் தொடர் சிறைதான் – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மற்றொரு முகம்

credits : the indian express

முறையான வழக்கு விசாரணை இல்லாமல் ஒரு நபரை சிறையில் அடைக்கும் அதிகாரம் பொருந்திய கருப்புச் சட்டமான, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்திர பிரதேச மாவாட்ட அதிகாரிகள் சுலபமாகப் பயன்படுத்துவது ஏன்? என்பதை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது.

அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களையும் முன் கூட்டியே தடுத்து, சிறையில் அடைக்க தேசிய பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

நீதிமன்ற காவலில் இருப்பவர், ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலிருந்து வெளி வராத வகையில் உத்தர பிரதேச அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் – தனி மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகிறது – அலகாபாத் உயர் நீதிமன்றம்

இந்தச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய முடியாது, இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட அளவில் அதிகாரம் பொருந்தியவரின் (மாவட்ட நீதிபதி அல்லது மண்டல ஆணையர்) ஒப்புதல் தேவைப்படுகிறது.

ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போதும் கூட, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருக்கும் நபரும் கூட, உடனடியாகத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது செய்யப்படலாம். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் நபரும் கூட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.

உத்தர பிரதேசத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் அளித்தும், 200 நாட்களுக்கும் மேல் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனி நபர் சுதந்திரத்தையும் இந்தச் சட்டம் பறிக்கிறது. மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர், குற்றவியல் நீதிமன்றத்தில் தன்னுடைய பிணை மனுவைத் தாக்கல் செய்ய முடியாது. இந்தச் சட்டத்தின் கீழ் கைதாகியிருக்கும் நபர், ஆட்கொணர்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும் உத்தரவை வழங்கிய மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும் இந்தச் சட்டம் அனுமதியளிக்க மறுக்கிறது.

”சமூக பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் சுதந்திரத்திற்கு இடையிலான நுட்பமான சமநிலையை” கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மக்கள் சிறையில் அடைக்கப்படுவது கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உயர் நீதித்துறை கருதுகிறது.

இந்தச் சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம், ”இந்த அபாயகரமான சக்தியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறையில் அடைக்கப்படுவது கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு ஒரேயோரு பாதுகாப்பு விதிமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்கள் தங்களுடைய வாதங்களை மூன்று நபர்கள் கொண்ட ஆணையத்திடம் (முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியைத் தலைவராகக் கொண்டு செயல்படும்) தெரிவிக்கலாம். ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளிலும், ஆணையம் சிறையில் இருந்த எவரையும் விடுவிக்கவில்லை.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்