Aran Sei

காவல்துறையினர் தங்கள் உரிமைக்காக போராட முடியாது – உயர் நீதிமன்றம் கவலை

Image Credits: New Indian Express

காவல்துறையில் காலியிடங்கள் நிரப்புதல் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றை பற்றி நாளை பதிலளிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மற்ற துறையைச் சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்றனர், காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் பகுதியைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். குறிப்பாக முக்கியஸ்தர்கள் வரும் சமயம், சாலை ஓரங்களில் நின்று பொதுமக்களை பாதுகாக்கும் பணி செய்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழகத்தை பொறுத்தவரை 1000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல் துறையினர் உள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மத்தியபிரதேசத்தில் காவல் துறை அலுவலருக்கு 38,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் 40 ஆயிரம் வரையிலும், மேற்கு வங்காளத்தில் 28,500, மகாராஷ்டிராவில் 29,000-ல் இருந்து 34,000 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஏழை நாடான உகாண்டாவில் கூட 47 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆனால், தமிழகத்தில் மழை வெயில் போன்றவற்றை பாராமல் பணிபுரியும் காவலர்களுக்கு, வெறும் 18 முதல் 20 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் காவலராக நியமிக்கப்படும் 90 சதவீதத்தினர் அவர்களது வீட்டிலிருந்து சொந்த ஊரிலிருந்து வெகுதொலைவிலேயே பணியில் நியமிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிகக்குறைந்த ஊதியமானது அவர்களுக்கு வாழ்க்கை நடத்துவதற்கு போதிய அளவில் இல்லாமல் உள்ளது” என மாசிலாமணி மனுவில் கூறியுள்ளார்.

“எனவே 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழக காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். அதேபோல் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்” எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

அதற்கு நீதிபதிகள், “‘காவலர்களுக்கு என்ன பிரச்சனை? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளிப்பதில் தாமதம் ஏன்?” என்று கேட்டுள்ளனர்.

காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாளை பிற்பகலுக்குள்ளாகப் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

“தவறினால் தமிழக உள்துறைச் செயலர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராக நேரிடும்” என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து வழக்கை நாளை ஒத்திவைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்