சிறுமியிடம் தவறாக நடத்து கொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரரைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யாததற்கு விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மேற்கு வங்கக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தது ஏன் என ஹுக்ளி கிராமப்புற மாவட்ட காவல்துறையிடமும் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக ஆணையத்தின் தலைவர் அனன்யா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
ஹூக்ளி மாவட்டம் தாரக்கேஷ்வர் பகுதியில், நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து அவரை பணியிலிருந்து நீக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட வீரருடன் சேர்த்து அந்தப் பிரிவில் இருந்த 7 அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது என அனன்யா கூறியுள்ளார்.
”தாரகேஷ்வரில் சென்று பாதிக்கப்பட்ட சிறுமியைச் சென்று சந்தித்தேன். குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்ட முடியும் எனச் சிறுமி என்னிடம் தெரிவித்தார். ஆனால் விசாரணை அதிகாரியோ, சிறுமிக்குக் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் தெரியவில்லை கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி விடுதலை செய்தார்கள்?” என அனன்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மைனராக இருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படை வீரரை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் (போக்சோ) கைது செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
”எந்த முறையான விசாரணையுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரை அடுத்த பணியிடத்திற்கு செல்ல அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய பெரிய பிரச்னையில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பது கவலையளிக்கிறது” என அவர் கூறியுள்ளார்.
”குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என மேற்கு வங்கக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.