Aran Sei

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 5)

யோகியின் ஆட்சியில் பெண்கள்: ஹத்ராஸ்களும் உன்னாவ்களும்

பெண்கள் தனியாகவோ சுதந்திரமாகவோ இருக்க முடியாது என்று ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.yogiadityanath.in இல் 2014 ல் வெளியிட்ட Matrashakti — Bharatiya Shakti keSandarbh Mein என்ற தனது கட்டுரையில் எழுதினார்.  பெண்களுக்கு ஆண் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும்,  அவர்களைக் கட்டுப்படுத்த  வேண்டும் என்பதையும், சமூக ஒழுங்கை அச்சுறுத்தும் மேற்கத்திய பெண்ணியக் கருத்துக்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் ஆதித்யநாத் உறுதியாக நம்புகிறார்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 1)

“நம் சாத்திரங்களில், பெண்களின் மகத்துவம் விவரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அவர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் அலங்காரம், கண்ணியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியமும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் ஆற்றலைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், கட்டுப்பாடற்றது,  பயனற்றதாகவும், அழிவுகரமானதாகவும் ஆகலாம், அதேபோன்று ‘சக்திஸ்வரூபஸ்திரீ’—அதிகாரத்தின் உருவகமான பெண்ணுக்கு—உண்மையில் சுதந்திரம் தேவையில்லை, மாறாக பாதுகாப்பும் வழிகாட்டுதலும் கொண்ட ஒரு அர்த்தமுள்ள பங்குதான் தேவைப்படுகிறது.” என்று எழுதியுள்ளார். பெண்களைப் பற்றிய அவரது உலகக் கண்ணோட்டம் இந்துத்துவா சித்தாந்தத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது – ஒரு பெண் ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மட்டுமே கருதப்படுகிறாள், ஒரு தனிநபராக அல்ல.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

“அத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பெண் சக்தி மட்டுமே பெரிய மனிதர்களைப் பெற்றெடுத்து, வளர்க்கும்,. மேலும் தீய சக்திகளை அழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி போர்க்களத்தில் அடியெடுத்து வைக்கும்.  இல்லையெனில் மேற்கத்திய உலகின் பெண் சுதந்திரம் என்ற சிந்தனையற்ற புயல் அவர்களை மேலும் மேலும் தாக்கும். அது பேரழிவு நிலையையும், வீடு மற்றும் குடும்பத்தின் உருவாக்கத்தையும், நிலைத்தத்தன்மையையும் தடுக்கும். அத்துடன்  தேசம் மற்றும் தாய்நாட்டின் புகழ்பெற்ற மறுகட்டமைப்பைத் தடுக்கும்,” என்று அவர் எழுதுகிறார்.

நாஜி ஜெர்மனியில், தங்களின் மிக முக்கியமான கடமை ஒரு நல்ல மனைவியாக இருக்க வேண்டும், ‘தந்தைநாட்டிற்காக’ போராடும் மற்றும் மக்களை வளர்க்கும் திறன் கொண்ட மகன்களைப் பெற்றெடுத்து, ஆரிய இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற, வீட்டிற்கு வெளியே செல்லாத ஒரு எளிய பெண்ணின் சிந்தனையுடன் அவரது கருத்துக்கள் முற்றிலும் இணையானவை. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் அவர் எதிர்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, இது குடும்ப அமைப்பில் அது அவர்களின் பாத்திரங்களை பாதிக்கும். அவர், “சுறுசுறுப்பான அரசியலிலும், பொது வாழ்விலும் உள்ள பெண்கள் ஆண்களைப் போலவே இருக்கிறார்களா, இந்த செயல்பாட்டில் அவர்கள் தாய், மகள் மற்றும் சகோதரிகள் என்ற முக்கியத்துவத்தையும் பங்கையும் இழக்காமல் இருக்கலாமா என்பதை மதிப்பீடு செய்து முடிவு செய்யுங்கள்.” என எழுதுகிறார்.  ஆனால் 2014 ஆம் ஆண்டு கட்டுரை வெளியிடப்பட்டதில் இருந்து பல தேர்தல்களில் பெண்கள் பங்கு முக்கியத்துவம் வகித்ததால், கட்டுரை தற்போது இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 3)

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, 2012 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 விழுக்காடு  அதிகரித்துள்ளது.  இதில் பாதி வழக்குகள் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்தவை. ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ் சாதி, மதம் கடந்து பெண்கள் மிக மோசமான குற்றச் செயல்களுக்கு ஆளாகி உள்ளனர்.  ஜூன் 2017ல், ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மூன்று மாதங்களில், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்  குல்தீப்செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளால் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக, முதல்வர் செங்கருக்கு ஆதரவை வழங்கினார்.  அதே நேரத்தில் தப்பிப்பிழைத்த குடும்பம் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. நீதிக்கான அவரது முயற்சியில், உயிர் பிழைத்தவர் முதல்வர் இல்லத்தின் முன்  தீக்குளிக்க முயன்றார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. மாறாக அவரது தந்தை கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் காவலில் இறந்தார். அவரது குடும்பம் பலமுறை தாக்கப்பட்டது; மாமா கைது செய்யப்பட்டார், டிரக் மோதியதில் இரண்டு அத்தைகள் கொல்லப்பட்டனர்.  சிறுமியும், அவளது வழக்கறிஞரும் அதில் பலத்த காயமடைந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு, சிவில் சமூகத்தின் எதிர்ப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிறகுதான் செங்கார் இறுதியாக 2019 டிசம்பரில் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த ஒன்பது மாதங்களுக்குள், 2020 செப்டம்பரில், லக்னோவிலிருந்து 380 கிமீ தொலைவில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் நான்கு உயர் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த முதல் பத்து நாட்களுக்குள் யாரும் கைது செய்யப்படவில்லை.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 4)

வன்முறையால் அவரது முதுகுத் தண்டுவடம் சேதமடைந்து, அவரை  செயலிழக்கச் செய்தது. அவளுடைய நாக்கு துண்டிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நள்ளிரவில் குடும்பத்தினரின் அனுமதியின்றி, பாதிக்கப்பட்டவரின் உடலை மாநில அரசு வலுக்கட்டாயமாக எரித்தது.  இந்த வழக்கு பரவலான ஊடக கவனத்தைப் பெற்றது. மேலும் நாடு தழுவிய எதிர்ப்பை உருவாக்கியது. ஆதித்யநாத், தனது அரசாங்கத்தின் முன்னேற்றத்தைக் கண்டு வருத்தமடைந்தவர்கள் மற்றும் சாதிய வன்முறையைத் தூண்ட விரும்புபவர்களால் ஹத்ராஸ் சம்பவம் பயன்படுத்தப் படுவதாக கூறினார்.

ஒரு வாரத்திற்குள், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க முயன்றதாக 19 வழக்குகளும், பட்டியலிடப்பட்ட தேசத்துரோகம், சதி மற்றும் பல்வேறு நபர்களுக்கு எதிராக மத வெறுப்பை ஊக்குவித்தல் போன்ற வழக்குகளும் பதியப்பட்டன. செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டு, கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 16 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யோகி அரசு மும்பையை தளமாகக் கொண்ட மக்கள் தொடர்பு நிறுவனமான கான்செப்ட் பி.ஆர். ஐ பணியமர்த்தியது.  இது பன்னாட்டு ஊடகங்களில் ‘ஹத்ராஸ் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்படவில்லை’ என்ற விளக்கக் குறிப்பை  முன்வைத்தது.

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

“பெண்களின் முன்னேற்றம் குறித்தோ அல்லது அவர்களுக்கு அதிகாரமளிப்பது குறித்தோ ஆதித்யநாத்துக்கு அக்கறை இல்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) முன்னாள் மையக் குழு உறுப்பினருமான சுபாஷினி அலி கூறுகிறார். “ஒரு இந்து பெண் ஒரு இஸ்லாமியர் ஆண் மீது ஈடுபாடு கொள்ளும்போது மட்டுமே அவர் ஆர்வம் காட்டுகிறார், ” என்று அவர் மேலும் கூறுகிறார்.  2009 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஒரு இந்துப் பெண்ணை அவர்கள் அழைத்துச் சென்றால், நாங்கள் 100 இஸ்லாமியர் பெண்களை தூக்கிச் செல்வோம்” என்று ஆதித்யநாத் உரை நிகழ்த்தினார்.  இஸ்லாமியர் ஆண்களுடன் இந்துப் பெண்களின் உறவை ஆதித்யநாத் கடுமையாக எதிர்த்தார். அதை காதல் ஜிகாத் என்கிறார். இந்த கோட்பாடு பல அரசு நிறுவனங்களால் ஆராயப்பட்டது.  இந்த ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சிக்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இயல்பாகவே வகுப்புவாதமாக இருக்கும்  இது இந்துப் பெண்களின் அறிவுத்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.  அவர்களின் தன்னாட்சி, ஒப்புதல், விருப்பம் ஆகியவற்றை மறுக்கிறது. 2017ல், முதல்வராகப் பதவியேற்ற உடனேயே, ‘ஆன்டி ரோமியோ ஸ்குவாட்’ என்ற காவல் படையை உருவாக்கினார்.  இது பொது இடங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களைக் குறிவைத்து,  இந்து பெண்கள் இஸ்லாமியர் ஆண்களுடன் டேட்டிங் செய்கிறார்களா என்பதைச் சரிபார்க்க அடையாள அட்டையைக் காட்டும்படி கட்டாயப்படுத்தினார். பெண்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது என்ற பெயரில். மார்ச் 22, 2017 முதல் நவம்பர் 30, 2020 வரை, ரோமியோ எதிர்ப்புப் படை 14,454 பேரைக் கைது செய்துள்ளது.

நவம்பர் 2020 இல், உ.பி. அரசாங்கம் உத்தரப் பிரதேசத்தில் சட்ட விரோதமான மத மாற்றத் தடைச் சட்டம், 2020ஐ இயற்றியது. யோகி ஆதித்யநாத் அரசாங்கம் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பிரச்சாரமான ‘மிஷன் சக்தி’யைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு அது நிறைவேற்றப்பட்டது. அனைவரும் அறிந்தது போல் இது ‘காதல் ஜிகாத் சட்டம்’  என்று அழைக்கப்படுகிறது

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

தவறான தகவல் மற்றும் கவர்ச்சியின் மூலம் மத மாற்றத்தை மேற்கொண்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன், பிணையிலும் வெளிவரமுடியாது. உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கான மத மாற்றங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் தேவை. டிசம்பர் 2021 இல், உத்தரபிரதேசத்தில் ‘காதல் ஜிகாத்’ சட்டத்தின் கீழ் முதல் தண்டனையாக கான்பூரில் ஒரு இஸ்லாமியர் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது. “இது இஸ்லாமிய ஆண்களைக் கைது செய்வதற்கும், இந்துப் பெண்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சமூகத்தின் சொத்தாகக் கருதப்படும் சுய விருப்பத் திருமணத்திலிருந்து அவர்களைத் தடுப்பதற்கும் ஒரு கருவியாகும்” என்று சுபாஷினி கூறுகிறார்.

தொடரும்…

South asian women in media இணையதளத்தில் நேஹா தீட்சித் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்