Aran Sei

அமெரிக்க குடியேற்ற விதிகளில் தளர்வு – பதவியேற்றதும் ஜோ பைடன் மேற்கொள்ளவுள்ள முதல் நடவடிக்கை

Image Credits: The Indian Express

தவியேற்றதும் முதல் வேலையாக, டிரம்ப் கொண்டு வந்த குடியேற்ற கொள்கைகளை திரும்பபெறுவேன் என்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றவுடன், உங்களுடைய முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு, “நான் புதிய குடியேற்றச் சட்டத்தை நிறைவேற்றி, அதுகுறித்து விவாதிப்பதற்காக நிலைக்குழுவிற்கு அனுப்பி வைப்பேன்” என்று வில்மிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் “கொடுமையான குடியேற்ற கொள்கையை” திரும்ப பெறுவோம் என்பது ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமான ஒன்றாகும். ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், 100 நாட்களில் குடியற்ற கொள்கையை திரும்ப பெறுவோம் என்று, ஜோ பைடன் ஏற்கனவே கூறியிருந்தார்.

டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடன், ஏழு இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார். அதைத்தொடர்ந்து, குடியேற்ற விவகாரத்தில் கடுமை காட்டி வந்த டிரம்ப், இறுதியாக கொரோனாவை பயன்படுத்தி குடியேற்ற விதிகளில் மாற்றங்களை கொண்டுவந்தார்.

அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கேட்பதற்கான விதிகளை கடுமையாக்கிய டிரம்ப், உள்நாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பதாக கூறி, தகுதி அடிப்படையில் குடியேற்றம் வழங்கும் முறையை அறிவித்தார். அமெரிக்காவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிவயர்களின் குழந்தைகளின் மீதும் நடவடிக்கை எடுக்கும் டிரம்ப்பின் முயற்சிக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் சுற்றுச்சூழல் தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளும் திரும்பப் பெறப்படும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளே, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில், அமெரிக்காவை இணைப்பேன் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

மூன்றாவதாக, கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நிதியை ஒதுக்குமாறு அமெரிக்க காங்கிரசை கேட்டுக்கொள்வேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்