இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நலனுக்குப் பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகளை பிரதிபலிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்து உள்ளதாகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றுள்ளார்.
அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அங்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘நாங்கள் இலங்கையில் அமைதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கிறோம். இலங்கையின் ஒற்றுமை, நிலைத்தன்மை, மாகாணங்களின் ஒருமைப்பாட்டுக்கு இந்தியா வலுவான ஒத்துழைப்பை எப்போதும் அளித்து வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
“இலங்கையில் இன நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டம் போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஒருங்கிணைந்த இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, சுயமரியாதை போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இலங்கையின் சொந்த ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசமைப்பின் 13-ம் சட்டத்திருத்தம் உட்பட, இலங்கை அரசால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் சமஅளவில் இது பொருந்தும். இதன் விளைவாக இலங்கையின் முன்னேற்றமும், வளமும் நிச்சயம் மேம்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பேச்சு குறித்து, ‘இலங்கையில் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகள்மீது மத்திய அரசின் அக்கறையைக் குறிக்கும் முக்கியமான ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். “இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் 13-வதுசட்டத்திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளைத் தமிழக மக்கள் வரவேற்பது உறுதி” என்றும் ஆளுனர் கூறியுள்ளார்.
“வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கரின் இந்த அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் அயராத முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது” எனவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.