ஒன்றிய அரசு என்பதை தொடர்ந்து பயன்படுத்துவோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய நயனார் நகேந்திரன், தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வரும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைக் குறித்து கேள்வி எழுப்பினார்.
முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிக்கப்பட்டதாக புகார் – பாதுகாப்பின்றி மக்கள் அவதியுறும் அவலம்
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல; கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படிடையில் தான் ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்பதற்கு பொருள். எனவே ஒன்றிய அரசு என்று கூறுவதை பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை, அதை சமூக குற்றமாக பார்க்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியிலேயே, இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்ற வரி தான் இடம்பெற்றுள்ளது” என அவர் விளக்கமளித்தார்.
”இந்தியாவிலிருந்து பிரிந்தது தான் மாநிலங்கள்” என நயினார் நகேந்திரன் பேசியதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை; எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவானது தான் இந்தியா” என தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.